கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கவிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழ்நாடு அரசு பெண்களுக்காக செயல்படுத்தும் முன்னோடி திட்டங்களின் சாதனைகள், பயனடைந்த மகளிரின் வாழ்ந்த அனுபவங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய பெண் சாதனையாளர்களை ஒன்றிணைத்து, பெண்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொண்டுள்ள அரசின் முன்னெடுப்புகளை எடுத்துக்காட்டும் நிகழ்வ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையிலும் வருகின்ற 12-தேதி மாலை 3 மணிக்கு நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் சமூக சேவகியும் மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிராக காந்திய வழியில் போரடியவரும் பத்மபூஷன் விருது பெற்றவருமான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் மற்றும் 2022-ஆம் ஆண்டு சீனாவின் காங்சோவில் நடைபெற்ற மாற்றுதிறனாளர் ஆசிய விளையாட்டு பூப்பந்து போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியவருமான துளசிமதி முருகேசன் ஆகியோர் உடன் கலந்து கொள்கின்றனர்.
“தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மகளிருக்கான ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, மகத்தான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும்” என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 27.03.2023 முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு, முதல் கட்டமாக சுமார் 1,13,75,492 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கான உரிமைத் தொகை, ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி மகளிருக்கே நேரடியாக சென்றடையும் வகையில் அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.சமீபத்தில், உதயநிதி ஸ்டாலின், "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும" என தெரிவித்தார். அதனையடுத்து தகுதி படைத்த அனைத்து மகளிர் பயனடையும் பொருட்டு, இத்திட்டம் 12.12.2025 அன்று இரண்டாம் கட்டமாக விரிவுப்படுத்தப்படவுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், நன்னிலம் மகளிர் நிலவுடைமைத் திட்டம், விடியல் பயணம், மக்களை தேடி மருத்துவம், சுய உதவி குழுக்கள், விளையாட்டு, வெற்றி நிச்சயம், நலம் காக்கும் ஸ்டாலின், பெண் தொழில் முனைவோர், தோழி விடுதிகள், போன்ற திட்டங்களினால் பயன்பெற்ற மற்றும் சாதனை பெண்களின் வெற்றிக் கதைகளை வெளிக்கொணரும் நிகழ்வாக மாநில அளவில் இந்த 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இவ்விழாவில் தமிழ்நாட்டின் சாதனை படைத்த பெண்கள், முக்கிய பெண் பிரபலங்கள், அமைச்சர்கள் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் பங்கு பெற உள்ளனர். இவர்களுடன் அனைத்து மாவட்டத்திலிருந்தும் அரசின் பெண்களுக்கான திட்டங்கள் மற்றும், பல்வேறு துறைகளான கல்வி, தொழில் முனைவோர், மருத்துவம், காவல், விவசாயம், அறிவியல் தொழில்நுட்பம், நிர்வாகம், தொழில் உற்பத்தி, அரசியல், கலை, விளையாட்டு ஆகியவற்றில் சாதனை படைத்தவர்களும் பங்கு பெற உள்ளனர்.
Follow Us