Advertisment

“ஓ.பி.எஸ்.ஸுக்கு மீண்டும் அழைப்பா?” - நயினார் நாகேந்திரன் பதில்!

nainar-nagendran-pm

கோப்புப்படம்

தூத்துக்குடியில் ரூ. 452 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி கடந்த ஜூலை மாதம் 26ஆம் தேதி திறந்து வைத்தார். இதனையடுத்து அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் 1000வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது அவரை சந்திக்க தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. நேரம் ஒதுக்குமாறு அனுமதி கேட்டிருந்தார். இருப்பினும் பிரதமர் மோடி அவருக்கு நேரம் ஒதுக்கவிலை. 

Advertisment

இத்தகைய சூழலில் தான் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்களோடு ஜூலை 31ஆம் தேதி (31.07.2025) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தனது உறவை முறித்துக் கொண்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெறாது. எந்த கட்சியுடனும் கூட்டணி என்பது இன்றைய நிலையில் இல்லை. எதிர்காலத்தில் நிலைமைகளுக்கேற்ப கூட்டணியை முடிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது என முடிவெடுக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, மதுரையில் தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவரும், அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஓ.பி.எஸ். என்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன். ஓ.பி.எஸ். விரும்பினால் ஆகஸ்ட் 26ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியைச் சந்திக்க ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘நயினார் நாகேந்திரன், தன்னிடம் சொல்லியிருந்தால் பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதில் எள்ளளவும் உண்மை இல்லை. எனவே, இது குறித்த உண்மை நிலையை தெரிவிப்பது என் கடமை. 

நயினார் நாகேந்திரனை, 6 முறை கைபேசியில் தொடர்புகொள்ள நான் முயற்சித்தேன். ஆனால், அவர் எனது அழைப்பை எடுக்கவில்லை. எனவே, நயினார் நாகேந்திரனிடம் பேச வெண்டுமென்ற தகவலை குறுஞ்செய்தி மூலம் அவருக்கு அனுப்பியிருந்தேன். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதற்கும் அவர், எந்தவிதப் பதிலும் அளிக்கவில்லை’ எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “அவர் என்னைத் தொடர்பு கொண்டதாக அவர் சொல்கிறதுதான் ஆதாரமாக இருக்குமே தவிர. ஆதாரம் அவருடைய கையில் இருக்காது. நான் தான் அவரை தொடர்பு கொண்டேன்” எனத் தெரிவித்திருந்தார். 

Advertisment

இத்தகைய வார்த்தை போர்களுக்கு இடையே ஒ. பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவரிடம் நயினார் நாகேந்திரனைத் தொடர்பு கொண்டது தொடர்பாக ஆதாரங்கள் எதுவும் உள்ளதா?, அது தொடர்பான கடிதங்கள் எதுவும் உள்ளதா? எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “இது தொடர்பாக ஏற்கனவே கடிதத்தை வெளியிட்டுள்ளேன். தனது மொபைலில் உள்ள ஆதாரத்தைக் காட்டுகிறேன்” எனக் கூறினார். அதோடு அவரது செல்போனில் இருந்து நயினார் நாகேந்திரனுக்குத் தொடர்புகொண்ட குறுஞ்செய்தி ஒன்றை காட்டிச் சென்றார். 

இந்நிலையில் நயினார் நாகேந்திரனிடம், செய்தியாளர் ஒருவர், “ஓ.பி.எஸ்.க்கு அழைப்பு விடுப்பீர்களா?. மறுபடியும் அவர் கூட்டணிக்கு வருவாரா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு, “அது பற்றி பிறகு பேசலாம்” என நயினார் நாகேந்திரன் பதிலளித்தார்.

Alliance b.j.p nainar nagendran Narendra Modi O Panneerselvam
இதையும் படியுங்கள்
Subscribe