'Will Vijay give such a reason?' - Seeman questions Photograph: (ntk)
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, திமுக தலைமையிலான கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளனர். அதே போல் அதிமுக - பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக, அன்புமணி தரப்பு பா.ம.க, த.மா.க, ஐஜேகே, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதே போல் விஜய்யின் தவெக, பிற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது எனக் கூறப்படுகிறது. இது தவிர தேமுதிக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு, ராமதாஸ் தரப்பு பாமக ஆகிய கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவிக்காமல் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
த.வெ.க. தலைவர் விஜய் தனியார் ஆங்கில செய்தி சேனலுக்கு சிறப்புப் பேட்டி ஒன்றை அளித்தார். அதில், “அரசியலில் எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் எனது ரோல் மாடல் என தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சீமான்,'' அது விஜய்யின் தனிப்பட்ட முடிவு. அதேநேரம் உங்கள் கட்சியில் கொள்கை தலைவர் என வைத்துள்ள 5 பேரில் யாரும் ரோல் மாடல் இல்லையா? எங்களுக்கு நிறைய முன்மாதிரிகள் இருக்கிறார்கள். ஆனாலும் நாங்கள் ஏற்றுக்கொண்ட தலைவர் பிரபாகரன் தான். எங்களுக்கு எல்லாமுமாகவே அவர் இருந்தார். எங்களுக்கு முன்னவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நேர்மையானவர், எளிமையானவர் என்றால் காமராஜர், தன்னலமற்ற தொண்டு என்றால் வஉசி, முத்துராமலிங்க தேவர், கக்கன், வாழும் புனிதராக நல்லகண்ணு இருக்கிறார். இப்படி ஒருவர் இரண்டு பேர் இல்லை பலர் இருக்கின்றனர்.
ஆனால் விஜய் ரோல் மாடலாக யாரை எடுத்துக் கொள்வது என்பது அவரது தனிப்பட்ட விருப்பம். எம்ஜிஆரை, ஜெயலலிதாவை விஜய் எதில் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டார் என்று உள்ளது. ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றதை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டாரா?. எம்ஜிஆர் பயிற்று மொழி தமிழ் என இருந்ததை ஆங்கிலம் பயிற்று மொழி என் மாற்றினார். அதை வரவேற்று விஜய் எடுத்துக் கொண்டாரா? என்பதை தெரிவிக்க வேண்டும். ஆனால் அதேநேரம் எம்ஜிஆரிடம் நாங்கள் எடுத்துக் கொண்டது ஈழ விடுதலைக்கு எங்கள் தலைவருக்கு எம்ஜிஆர் உதவினார். எங்கள் தலைவரை பெற்ற மகனைப் போல நேசித்து இரகரமும் கொடுத்த அன்பிற்கு அவரை போற்றுவோம். இது போன்ற ஒரு காரணத்தை விஜய் சொல்வாரா?'' என்றார்.
Follow Us