குடியரசுத் துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்த ஜக்தீப் தன்கர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி (21.07.2025) தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருந்தார். இதன் காரணமாகக் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்துவதற்கான நடைமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இத்தகைய சூழலில் தான் வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி (09.09.2025) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குடியத் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனையடுத்து குடியரசு துணைத் தலைவரை நியமிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டு பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாரா அல்லது ஆளுங்கட்சியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாகவும், எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி சார்பாகவும் தனித்தனி வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருந்தது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக சி.பி ராதாகிருஷ்ணன் நேற்று (17.08.2025) அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இன்று (18.08.2025) ஆலோசனைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் தமிழரான சி.பி. ராதாகிருஷ்ணனை எதிர்த்து தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வேட்பாளரை நிறுத்தலாம் என ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவாவைக் குடியரசு துணைத்தலைவர் தேர்தலிலே வேட்பாளராக நிறுத்தலாம் எனவும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.