நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி (28.01.2026) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர், வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதன் ஒருபகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் தொடக்கத்தின் அடையாளமாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஜனவரி மாதம் 29ஆம் தேதி (29.01.2026) உரையாற்றினார்.

Advertisment

அப்போது அவர், “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் முதல் நிதியமைச்சர் ஆவார். தொடர்ந்து 9வது முறையாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நாட்டின் முதல் பெண் நிதியமைச்சர் ஆவார். இது நாட்டின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு பெருமைமிக்க தருணமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் தான் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக நிதி அமைச்சக செயலாளர்களுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்வுவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்து பேசினார்.

Advertisment

அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இனிப்பு வழங்கி ஊட்டிவிட்டார். இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026 - 2027ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய  பட்ஜெட்டை இன்று (01.02.2026) காலை 11 மணியளவில் மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். இதற்கு சற்று நேரத்திற்கு முன்னதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான பின்வரும் அறிவிப்புகள் இடம்பெறுமா?.

bugget-2026-nirmala

விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான 3,548 கோடி ரூபாய் கல்வி நிதி, கோவை, மதுரை மெட்ரோ இரயில், தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ஜல் ஜீவன் திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி,புதிய இரயில்வே திட்டங்கள், நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு. இன்னும் பட்டியல் இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்தாவது இம்முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளைத் தவறாமல் வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். அவை மதுரை எய்ம்ஸ் போல அறிவிப்போடு நின்றுபோகாமல், முறையான நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோருகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment