Will the resolution to change the name of the state of Kerala be passed? Photograph: (keala)
கேரளா மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. நீண்டகாலமாகக் கேரளா மாநிலத்தின் பெயரை "கேரளம்" என மாற்ற வேண்டும் எனும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. அந்த வகையில், அதிகாரப்பூர்வ பதிவேடுகளில் பெயரை மாற்றுவதற்கான தீர்மானத்தை மாநில சட்டமன்றம் ஏற்கனவே நிறைவேற்றியுள்ளது. இருப்பினும், கேரளாவைத் தவிர்த்து மற்ற மாநிலங்கள் "கேரளம்" என்று அழைக்காமல் "கேரளா" என்றே அழைக்கின்றன. இதன் காரணமாக, 2024 ஆம் ஆண்டு இந்த தீர்மானத்தை முன்மொழிந்த கேரளா அரசு, அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் தங்களது மாநிலத்தின் பெயரை "கேரளா" என்பதிலிருந்து "கேரளம்" என்று மாற்ற வேண்டும் என வலியுறுத்தியது.
குறிப்பாக, இந்தப் பெயர் மாற்றத்தின் மூலம் சில சமூக விரோத சக்திகள் மதரீதியாக மாவட்டங்களைப் பிரிக்க முன்வைக்கும் கோரிக்கையை முறியடிக்க முடியும். கேரளத்தின் ஒற்றுமை மேம்படும். நாட்டின் அனைத்து பிராந்தியங்களின் தனிச்சிறப்புகள், பாரம்பரியம், கலாச்சாரம் காக்கப்பட வேண்டும். எனவே, மலையாள மொழியை அடிப்படையாகக் கொண்ட ‘கேரளம்’ என்ற பெயர்மாற்றம் அவசியம் என ஒரு தரப்பினர் தங்களது கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில், கேரளா அரசு நிறைவேற்றிய இந்த தீர்மானத்தை மதிப்பாய்வு செய்த ஒன்றிய உள்துறை அமைச்சகம், அதில் சில தொழில்நுட்ப மாற்றங்களைப் பரிந்துரைத்தது. இதனையடுத்து, ஜூன் 25, 2024 அன்று கேரளா சட்டமன்றம் இரண்டாவது முறையாகத் தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அமைச்சகத்திற்கு அனுப்பியது. இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்கியிருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்றிலிருந்து அரசு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்திலும், கேரளா எனும் பெயர் " கேரளம்" என மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us