சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் அண்மையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி 13 நாட்களுக்கு மேலாக ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசு சார்பில் பல கட்டபேச்சு வார்த்தைகள் நடைபெற்ற நிலையில் அவை தோல்வியிலேயே முடிந்தது. இதன் காரணமாக தொடர்ந்து 13 நாட்களுக்கு மேலாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக கைது செய்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் மீண்டும் ரிப்பன் மாளிகை முன்பு தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.