வருகின்ற சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் மும்மரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், கூட்டணி குறித்தும் பரபரப்பான அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள்  போன்றவை ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. நீண்ட காலமாக, இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது என திமுக உட்பட அனைத்து கட்சிகளும் தொடர்ந்து பேசிவந்த நிலையில், சமீபத்தில் காங்கிரசின் செயல்பாடுகள் மற்றும் சில நிர்வாகிகளின் பேச்சுக்கள், இந்த கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் விதமாக இருந்து வந்தன.

Advertisment

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை சில தினங்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்று வந்த பிறகு, நாங்கள் இந்தியா கூட்டணியில் தான் உள்ளோம் என்று உறுதிபடத் தெரிவித்தார். இருந்த போதிலும் தற்போது நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளின் செயல்பாடுகள் கருத்துக்கு திருப்தியளிப்பதாக இல்லை என்று கட்சி மேலிடம் கவலை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.

Advertisment

அதாவது, சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் தமிழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் உட்பட 40 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி கட்சியின் செயல்பாடுகள் குறித்து கடுமையான கேள்விகளை முன் வைத்தார். தென்னிந்தியாவின் கேரளா, கர்நாடக, தெலங்கானா, புதுச்சேரி போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வளர்ந்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ஏன் வளரவில்லை? கட்சியின் வளர்ச்சிக்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்? எனக் கேள்வி எழுப்பியதாகத் தகவல் வெளியாகின.  இதற்கு நிர்வாகிகள் பதிலளித்த போதிலும், அந்த பதில்கள் திருப்தியளிப்பதாக இல்லை என்று ராகுல் காந்தி கூறியதாக தகவல்கள் வெளியாகின்றன. பொதுவாக தமிழ் நாட்டில், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளின் உட்கட்சி  பூசல் காரணமாக கட்சி வளரவில்லை என்றும் கூறப்பட்டது வருகிறது. இதனால் கட்சி மேலிடம் நிர்வாகிகள் மீது கடுமையான அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிய வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியினை, தமிழ் நாட்டில் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் ராகுல்காந்தி பல்வேறு திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி, வருகின்ற காலங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், விரைவில் 60க்கும் மேற்பட்ட புது முகங்களுக்கு மாவட்ட பொறுப்புகள் வழங்கப்பட இருப்பதாகவும், அந்த தேர்வுகள் ராகுல் காந்தியின் மேற்பார்வையில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பங்கீடு குறித்து ராகுல் காந்தியே முடிவு செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர்த்து, இனிவரும் காலங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தியின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளன.

Advertisment