தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் 4  நாள் பயணமாக இன்று (20.01.2026) இரவு பியூஷ் கோயல் சென்னை வருகிறார். 

Advertisment

இதனையடுத்து சென்னை கிண்டியில் உள்ள பிரபல  தனியார் நட்சத்திர விடுதியில் நாளை (21.01.2026) காலை நடைபெறும் பாஜக நிர்வாகிகளின் உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். அதே சமயம் அமமுக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. வரும் 23ஆம் தேதி (23.01.2026) பிரதமர் மோடி தலைமையில் சென்னையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்களா என்பது குறித்தும் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் (22.01.2026) அதிமுக - பாஜக இடையேயான தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வமாக கையயெழுத்திடப்படும் எனக் கூறப்படுகிறது. 

Advertisment

இந்நிலையில் தேமுதிகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அதே சமயம்  கூட்டணியில் 18 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் மாநிலங்களவையில் ஒரு இடம் ஆகியவற்றை தேமுதிக கோரியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தேமுதிகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கான இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நாளை சென்னையில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.  

முன்னதாக இரண்டு முறை தமிழகத்திற்கு வந்திருந்த பியூஷ் கோயல் கட்சி மற்றும் கூட்டணி தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை நடத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணி தொடர்பாக முதற்கட்டமாக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மற்றொருபுறம் அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன், அக்கட்சியின் மாவட்ட செயலர்களுடன் கூட்டணி தொடர்பாக நாளை முக்கிய ஆலோசனையை நடத்த உள்ளது கவனிக்கத்தக்கது. 

Advertisment