அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்தவரும், முன்னாள் எம்.பி.யுமான மைத்ரேயன், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு..க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (13.08.2025) திமுகவில் இணைத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மைத்ரேயன், ''அதிமுகவினுடைய போக்கு சரியாக இல்லை. அதிமுகவினுடைய பொதுச்செயலாளர் இபிஎஸ் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி அமைத்திருக்கிறார். ஆனால் அந்த கூட்டணி அறிவித்ததே மத்திய அமைச்சர் அமித்ஷா தான். அது மட்டுமில்லை. அமித்ஷா ஒரு குறைந்தப்பட்ச கூட்டணி ஆட்சி என்று சொல்லியிருக்கிறார் . குறைந்தபட்ச செயல் திட்டம் என்றும் சொல்லியிருக்கிறார். எதிலே குறைந்தபட்ச செயல் திட்டம் வரும். அதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் '' என்றார்.

Advertisment

மைத்ரேயனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியும் திமுகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த தகவலை மறுக்கும் வகையில் தங்கமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'திமுகவில் இணைவதாக யாரோ சில அரசியல் எதிரிகள் தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர். என்னுடைய இறுதி மூச்சு வரை அதிமுகவில் தான் இருப்பேன். இறுதி மூச்சு நின்ற பிறகும் எனது உடலில் அதிமுக கொடிதான் போர்த்தி இருக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி எனது இதயத்தில் என்றும் நீக்கமற நிறைந்துள்ளார்கள்'' என தெரிவித்துள்ளார்.