தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகம் எடுத்திருக்கிறது. பாமகவில் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அன்புமணி பாமகவை தனக்கு சொந்தப்படுத்தி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளார். அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணியிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்று தெரிவித்து வருகிறார்.
அதே சமயம், அதிமுக கூட்டணியில் அன்புமணி இருப்பதால், அந்த கூட்டணியில் இணைய முடியாத சூழல் ராமதாஸுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அன்புமணிக்கு எதிர்த்திசையில் இருக்கும் கூட்டணியில் இணைய ராமதாஸ் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இணைவதற்கு ராமதாஸ் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக தகவல் வெளியானது. ஆனால், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகச் சொல்லப்பட்டது.
அதாவது சில வருடங்களுக்கு முன்பே பாமக, பாஜக இருக்கும் கூட்டணியில் கண்டிப்பாக இணையமாட்டோம் என்று திருமாவளவன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதனால் ராமதாஸை கூட்டணியில் இணைப்பதற்கு திமுக தலைமை தயக்கம் காட்டுவதாகவும், திருமாவளவன் சம்மதம் தெரிவித்தால் கூட்டணியில் சேர்க்க வாய்ப்புள்ளது என திமுக கண்டிஷன் போட்டதாகவும் கூறப்பட்டது. அதனால் ராமதாஸ் தரப்பினர், திருமாவளவனுக்கு இணக்கம் காட்டி வந்தனர். ஆனால், ராமதாஸை கூட்டணிக்குள் இணைப்பதற்கு திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் ராமதாஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியது. இந்நிலையில் சேலத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பாமகவின் இணைப்பொதுச்செயலார் அருள் பேட்டியளிக்கையில், ''அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். விஜய்யை சுற்றி இளைஞர்கள் தேனீயை போல சுற்றி சுழன்று கொண்டிருக்கிறார்கள். அதற்கு நாம் என்ன செய்ய முடியும். அவருக்கு மக்கள் ஒட்டு போடுவார்கள் என்றால் அதை யார் தடுக்க முடியும். ஆனால் யாரையும் குறைத்து மட்டும் மதிப்பிடாதீர்கள். திமுக, அதிமுக மட்டும்தான் ஆள வேண்டும் என இருக்கிறதா என்ன? ஒரு மாற்றம் தான் வரட்டுமே தப்பில்லையே. எங்களுடன் கூட்டணி குறித்து அனைவரும் பேசுகிறார்கள். அவர்களும் பேசுகிறார்கள்'' என்றார்.
இதன் மூலம் ராமதாஸ் தரப்பு அணி கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்திவருவதை பாமக எம்.எல்.ஏ அருள் உறுதிப்படுத்தியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/27/741-2026-01-27-18-17-12.jpg)