மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு குக்கி மற்றும் மெய்தி ஆகிய சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதல் மாநிலம் முழுவதும் வன்முறையாக மாறியது. இந்த மோதல் போக்கிற்கு நாட்டின் பல்வேறு மாநிலத்தில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. பொதுமக்கள், பெண்கள், சிறார்கள் என பலர் இந்த வன்முறையில் கொல்லப்பட்டனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மணிப்பூர் வன்முறை தொடர்ந்து நீடித்து வந்த நிலையில், கலவரத்தை தடுக்க தவறியதாகக் கூறி மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் மன்னிப்பு கேட்டார். அதன் பின்னர், கடந்த பிப்ரவரி மாதம் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து, அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அமைக்கும் முயற்சியில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் 10 பேர், கடந்த மே மாதம் ஆளுநர் அஜய் குமார் பல்லாவைச் சந்தித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை நிறுவ வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில் நிலம், அடையாளம் மற்றும் உரிமைகள் தொடர்பான சமரசமற்ற நிலைப்பாட்டைக் காரணம் காட்டி புதிய அரசாங்கம் அமைவதற்கு குக்கி இன்பி மணிப்பூர்  (KIM) மற்றும் அதன் கூட்டணிக் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சூரசந்த்பூரில் உள்ள பிஜாங்கில் உள்ள குகி இன்பி மணிப்பூர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில், குக்கி இன்பி மணிப்பூர் அமைப்பின் கூட்டமைப்புகளான குகி மாணவர் அமைப்பு-பொது தலைமையகம் (KSO-GHQ), குகி கங்லாய் லாம்பி-GHQ, குகி கிறிஸ்தவ தலைவர்கள் மன்றம் (KCLF), குகி மகளிர் சங்கம் (GHQ), மனித உரிமைகளுக்கான குகி பெண்கள் அமைப்பு (GHQ), குகி தலைவர்கள் சங்கம்-மணிப்பூர் (KCA-M) ஆகியவற்றின் உயர் பிரதிநிதிகள், துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

இந்த கூட்டத்தில், எந்த குக்கி இன எம்.எல்.ஏவும் மணிப்பூர் மாநிலத்தில் புதிய அரசாங்கம் அமைப்பதற்கு எந்த வகையிலும் பங்கேற்கவோ கூடாது என முடிவு எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், குக்கி மக்கள் தங்கள் மூதாதையர் நிலம் அடையாளம், கலாச்சாரம், அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளில் சமரசம் செய்ய மாட்டார்கள்’ என்று தெரிவித்துள்ளது. மணிப்பூர் சட்டமன்றத்தில் உள்ள 10 குக்கி இன சட்டமன்ற உறுப்பினர்களில், 7 பேர் பா.ஜ.கவைச் சேர்ந்தவர்கள். குக்கி இன்பி மணிப்பூர் அமைப்பின் இந்த அறிவிப்பு அந்த மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், புதிய அரசாங்கம் அமைப்பதற்கு பா.ஜ.கவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.