கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடும் தாக்குதலை நடத்தி, இஸ்ரேலியர்கள் உட்பட 200க்கும் அதிகமானோரை பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாஜ ஹமாஸ் அமைப்பு மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
2 வருடங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இந்த தாக்குதலில் 18,500க்கும் அதிகமான குழந்தைகள் உட்பட 64,700க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தம் குறித்த எதிர்பார்ப்புகளும், அழுத்தங்களும் சர்வதேச அளவில் வழுத்து வரும் சூழலில், காசாவில் அகதிகளாக ஆக்கப்பட்டிருக்கும் பாலஸ்தீனியர்களுக்கு புகலிடமாக இருந்து வரும் மருத்துவமனை வளாகம், சில உயர் கட்டடங்களையும் ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்கி வருகிறது.
இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கை மிக மோசமான கட்டத்தை எட்டியுள்ளதால் காசாவில் வாழும் பாலஸ்தீனியர்கள் அடிப்படைத் தேவையான உணவு, இருப்பிடம், உடை ஆகியவைகள் இல்லாமல் நாள்தோறும் தவித்து வருகின்றனர். குழந்தைகள் உட்பட பலரும் உணவுக்காக கையேந்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் உலுக்கியுள்ளது. உணவின்றி தவித்து வருவதால், லட்சத்திற்கும் மேலான பாலஸ்தீனியர்கள் இரவு பகலென்று பாராமல் தங்களது நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இஸ்ரேல் - பாலஸ்தீன விவகாரத்தில் அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் நியூயார்க் பிரகடனத்திற்கு ஆதரவான ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக வாக்களித்து இருக்கின்றன. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது, காசாவில் உடனடி போர் நிறுதத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட இந்த தீர்மானத்திற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. இது ஒருபுறமிருக்க காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை எதிர்த்து உலகில் உள்ள பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே அமைதி பேச்சுவார்த்தைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து நடத்தி வருகிறார். அதன்படி, போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்தார். அதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் அமைப்பினர் சம்மதம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. முதற்கட்டமாக ஹமாஸ் மீது நடத்தி வந்த குண்டுவெடிப்பு தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தியது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/05/trum-2025-10-05-11-05-27.jpg)
இந்த நிலையில், பாலஸ்தீனத்தின் குறிப்பிட்ட பகுதியில் இருந்து முதற்கட்டமாக படைகளை விலக்கிக்கொள்ள இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்ரூத் சோசியல் வலைத்தளத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, “பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, காசாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. அதை நாங்கள் ஹமாஸிடம் காட்டி பகிர்ந்து கொண்டோம். ஹமாஸ் உறுதிப்படுத்தியதும், போர்நிறுத்தம் உடனடியாக பயனுள்ளதாக இருக்கும்
இஸ்ரேல் ஆரம்ப வாபஸ் வரிக்கு ஒப்புக்கொண்டது, அதை நாங்கள் ஹமாஸிடம் காட்டி பகிர்ந்து கொண்டோம். ஹமாஸ் உறுதிப்படுத்தியதும், போர்நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வரும், பணயக்கைதிகள் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடங்கும். அடுத்தக்கட்டமாக மற்ற பகுதிகளில் இருந்தும் படிப்படியாக இஸ்ரேல் படைகள் திரும்பப்பெறும் நிலைமையை நாங்கள் உருவாக்குவோம். இது இந்த 3,000 ஆண்டு பேரழிவின் முடிவை நெருங்கச் செய்யும்” எனப் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் காசா - இஸ்ரேல் இடையே விரைவில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.