ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாகவே வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளை நிலங்களுக்குள் நுழைந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை  தின்று சேதப்படுத்தி வருவதுமாக உள்ளன.

Advertisment

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பாரதிபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே மகேஷ் என்பவரது விவசாய நிலத்தில் நுழைந்த காட்டு யானைகள் சுமார் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை தின்றும் மிதித்தும் சேதம் செய்துள்ளன. அதேபோல் ஜீரகள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட அருளவாடி கிராமத்தில் ஜடேமாதன் என்பவரது விவசாய நிலத்தில் நுழைந்த காட்டு யானைகள் சுமார் 20 -க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை தின்றும் மிதித்தும் சேதம் செய்துள்ளன. மேலும் தாளவாடி மலைப்பகுதியில் தினந்தோறும் அட்டகாசம் செய்து வரும் யானைகளை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisment