மிகப்பெரிய பாலூட்டி இனமான காட்டு யானைகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எவ்வளவோ காட்டு விலங்குகள் இருந்தாலும் உயரத்திலும் கம்பீரத்திலும் காட்டு யானைகள் என்பது மிகவும் குறிப்பிடத்தகுந்ததாக உள்ளது. ஒரு வனத்தின் மொத்த செழிப்பையும் தீர்மானிக்கும் காரணிகளில் யானை மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. இருப்பினும் சமீபகாலமாகவே காலநிலை மாற்றம், வழித்தடம் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் யானைகள் இடையூறு பெற்று வனத்தை விட்டு வெளியேறி வேளாண் பயிர்களை சேதமாக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் சமீபத்திய ஆய்வின்படி இந்தியாவில் உள்ள காட்டு யானைகளின் எண்ணிக்கை என்பது வெகுவாக குறைந்துள்ளது இயற்கை ஆர்வலர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக 2017 ஆம் ஆண்டு வாக்கில் மொத்தமாக 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இந்தியாவில் இருந்த நிலையில் சமீபத்திய ஆய்வு நிலவரப்படி இந்தியாவில் 22,500 க்கும் குறைவான யானைகளே இருப்பதாக தெரியவந்துள்ளது.