நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகத்தில், தேசிய நெடுஞ்சாலை வழியாக மைசூருக்கும் உதகைக்கும் இடையே நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த நெடுஞ்சாலையை ஒட்டிய காட்டுப் பகுதியில் காட்டு யானைகள் அடிக்கடி சாலையோரம் வருவது வழக்கமாக உள்ளது.

Advertisment

இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 10) மாலை, பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றிருந்த காட்டு யானையை, ஒரு நபர் வாகனத்திலிருந்து இறங்கி செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த காட்டு யானை, அவரைத் துரத்தி சாலையில் போட்டு மிதித்தது. இதில் அவர் படுகாயமடைந்து, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தப் பரபரப்பான சம்பவத்தை, வாகனத்தில் இருந்த மற்றொரு நபர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

இதையடுத்து, வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சாலையோரங்களில் இருக்கும் வனவிலங்குகளை புகைப்படம் எடுக்க முயல்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எனவும், இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.