நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேளி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானை சுற்றி வந்தது. இந்த யானை இதுவரை 12 பேரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ராதாகிருஷ்ணன் காட்டு யானையைப் பிடிக்கும் பணியில் இன்று (23.09.2025) வனத்துறையினர் இறங்கினர். இதன் ஒரு பகுதியாகக் காலை 11:00 மணி அளவில் காட்டு யானைக்கு முதல் மயக்க ஊசியானது செலுத்தப்பட்டது.
இருப்பினும் யானையின் அருகில் வனத்துறையினர் செல்ல முடியாமல், தவித்து வந்தனர். இதற்கிடையே மயக்கம் தெளிந்த காட்டு யானையானது வனப்பகுதிக்குள் ஓடியது. அதன் பின்னர் 2வது மயக்க ஊசியானது செலுத்தப்பட்டது. இதனையடுத்து கும்கி யானைகள் உதவியுடன், வனத்துறை ஊழியர்கள் ராதாகிருஷ்ணன் யானை அருகில் சென்று, அதனை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து ராதாகிருஷ்ணன் காட்டு யானையை அங்கிருந்து அழைத்துச் சென்று அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கான முயற்சியில், வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 12 பேரைக் கொன்ற ராதாகிருஷ்ணன் காட்டு யானையைப் பிடிபட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.