தெலங்கானா மாநிலம் அந்தர்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதர். இவருக்கு லட்சுமி என்பவருடன் திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது. திருமணம் நடந்த ஆரம்பக் காலங்களில் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு கங்காதர் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றுவிட்டார்.

Advertisment

இதையடுத்து, லட்சுமி தன் பிள்ளைகளுடன் தனிமையில் வசித்து வந்தார். கணவன் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தில் இவர் மகிழ்ச்சியாக  வாழ்ந்து வந்தார். பின்னர், ஸ்மார்ட் போன் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். அதில், ரீல்ஸ் பார்ப்பது போன்று சமூக வலைத்தளங்களை அதிகமாகப் பயன்படுத்தி வந்துள்ளார். காலப்போக்கில் சமூக வலைத்தளத்தில் மூழ்கியிருப்பதிலே அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்து வந்துள்ளது.

Advertisment

இந்த நிலையில், போரண்ட்லா கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாத் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவருக்கும் நட்பு ஏற்பட்டதையடுத்து, மணிக்கணக்கில் பேசி வந்துள்ளனர். இது காலப்போக்கில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இதையறிந்த உறவினர்கள், லட்சுமி மற்றும் விஸ்வநாத் ஆகிய இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால், இருவரும் சேர்ந்து ஜக்தியாலா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், கங்காதர் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது தனது மனைவி வேறொரு ஆணுடன் வாழ்ந்து வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இருப்பினும், தங்களின் பிள்ளைகளின் நலனைக் கருத்தில் கொண்டு மனைவியுடன் சேர்ந்து வாழ முடிவெடுத்தார். அதனால், உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மனைவியை தன்னுடன் வந்து வாழும்படி அழைத்தார். ஆனால், லட்சுமி இந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார். இதனால், அவர் தனது பிள்ளைகளை மட்டும் அழைத்துச் சென்றுவிட்டார். சில நாட்களில், குழந்தைகள் தனது தாயார் இல்லாததை நினைத்துத் தவித்து வந்தனர். பிள்ளைகளின் மன வருத்தத்தைக் கண்டு கங்காதர் மனம் உடைந்து போனார். இருப்பினும், லட்சுமி தனது இரண்டாவது கணவனுடன் மகிழ்ச்சியாக இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கங்காதர் தனது நண்பரான திருப்பதியுடன் சேர்ந்து, லட்சுமியும் விஸ்வநாத்தும் திருவிழாவிற்குச் சென்று வந்துகொண்டிருந்த போது, அவர்களது பைக்கை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த, ஆயுதத்தைக் கொண்டு விஸ்வநாத்தை சரமாரியாகத் தாக்கியுள்ளார். அப்போது அவரது நண்பரும் விஸ்வநாத்தை அரிவாளால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதனால் விஸ்வநாத் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து ஜகத்தியாலா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisment