மனிஷா- பரமேஸ்வர் - தியானேஸ்வரன்
மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் உள்ள சம்தானா கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயதான பரமேஸ்வர். இவருக்கு 25 வயதான மனிஷா என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். பரமேஸ்வர் அருகிலுள்ள தொழிற்சாலையில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி பரமேஸ்வர் வீட்டில் இருந்து மாயமானார். குடும்பத்தினர் அவரை அக்கம்பக்கமும் உறவினர்களின் வீடுகளிலும் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் பரமேஸ்வர் கிடைக்காததால், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த ஜல்னா போலீஸ், மாயமான பரமேஸ்வரைத் தீவிரமாகத் தேடி வந்தது. இந்தச் சூழலில் நவம்பர் 13ஆம் தேதி அந்தப் பகுதியில் உள்ள பத்னாபூர் அணையில் ஆண் சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அது காணாமல் போன பரமேஸ்வர் என்பது உறுதியானது. இதையடுத்து உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் தலையில் பலமாகத் தாக்கப்பட்டு, கழுத்தை நெரித்து பரமேஸ்வர் கொலை செய்யப்பட்டு அணையில் வீசப்பட்டுள்ளது தெரியவந்தது. அதன் பேரில் விசாரணையைத் தீவிரப்படுத்திய போலீசாருக்கு, கணவர் மாயமானதாகப் புகார் கொடுத்த மனிஷாவின் வாக்குமூலத்தில் முன்னுக்கு பின் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது அவர்களுக்கு சந்தேகத்தை அதிகரித்துள்ளது. மனிஷாவை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்த காவல்துறையினர், துருவித் துருவிக் கேள்விகளைக் கேட்டுள்ளனர். அதில், அதிர்ச்சி தரும் உண்மைகளை வெளிப்படுத்தி போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
கடந்த 6 மாதங்களாகக் கணவரின் தம்பியான 22 வயது தியானேஸ்வருக்கும் மனிஷாவுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. அதன் காரணமாகக் கணவர் பரமேஸ்வர் இல்லாத நேரத்தில் இவர்கள் இருவரும் சந்தித்துத் தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் கணவர் பரமேஸ்வருக்கு தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இருவரையும் அழைத்துக் கண்டித்துள்ளார். ஆனால் திருமணத்தை மீறிய உறவைக் கைவிட மனமில்லாத இருவரும், உறவைத் தொடர்ந்து வந்துள்ளனர். இருப்பினும் பரமேஸ்வரின் தொடர் தொந்தரவு, இவர்கள் இருவருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதனால் தங்களது உறவுக்கு இடையூறாக இருக்கும் பரமேஸ்வரைத் தீர்த்துக்கட்ட இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, அக்டோபர் 15ஆம் தேதி வீட்டின் அருகே தனியாக இருந்த பரமேஸ்வரை அவரது தம்பி தியானேஸ்வர் தலையில் கல்லால் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் கீழே விழுந்த பரமேஸ்வரை அவரது மனைவி மனிஷா துணியால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலைப் பெரிய பாலித்தீன் பையில் சுற்றி கல்லைக் கட்டி அருகிலுள்ள அணையில் வீசியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்துள்ளனர்.
கொழுந்தனுடன் சேர்ந்து, திருமணத்தை மீறிய உறவிற்குத் தடையாக இருந்த கணவரைக் கொன்ற மனைவியின் செயல் அந்தப் பகுதியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us