கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் பகுதியில் உள்ள குர்லாஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுனிதா. இவர்களுக்குத் திருமணமாகி 13 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. திருமணமான காலம் முதல் தொட்டே இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இருப்பினும், கடந்த சில மாதங்களாக அவர்களது குடும்பத்தில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

Advertisment

இதனால், இவர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்தது. இந்த சமயத்தில், சுனிதா சமூக வலைத்தளத்தில் மூழ்கி இருந்துள்ளார். இந்த நிலையில், சமூக வலைத்தளத்தின் மூலமாக அடையாளம் தெரியாத நபருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காலப்போக்கில் காதல் உறவாக மாறியுள்ளது. இதனால், இருவரும் நீண்ட நேரமாக போன் உரையாடலில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த மூன்று மதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய, சுனிதா ஆண் நண்பருடன் சென்றுவிட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த முனிராஜ், இது குறித்து சுனிதாவின் பெற்றோருக்குத் தகவல் அளித்தார். 

Advertisment

பின்பு, சுனிதாவின் பெற்றோர் அவரை கண்டுபிடித்து, முனிராஜுடன் சேர்த்து வைத்தனர். மனைவியின் செயலை மன்னித்து முனிராஜும் சுனிதாவை ஏற்றுக்கொண்டார். பெற்றோர்கள் சென்ற பிறகு சுனிதா மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதோடு, தான் ஆண் நண்பருடனேயே சென்றுவிடுவதாக பிடிவாதமாக இருந்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த முனிராஜ், கடும் வேதனையில் இருந்து வந்தார். மனவேதனையின் உச்சத்தில் இருந்த அவர், இரவு நேரத்தில் அனைவரும் தூங்கிய பின்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.   

காலையில், குடும்பத்தினர் முனிராஜ் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment