ஆண் நண்பர் - மனைவி - கணவர்
கர்நாடக மாநிலம் விஜயாபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பீரப்பா பூஜாரி. இவரது மனைவி சுனந்தா பூஜாரி (29). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சித்தப்பா கட்டனகேரி என்ற இளைஞருடன் சுனந்தா பூஜாரிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் அது திருமணத்தை மீறிய உறவாகவும் மாறியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இருவரும், கணவர் இல்லாத நேரத்தில் அடிக்கடி வெளியே சென்று ஊர் சுற்றி தனிமையில் இருந்து வந்திருக்கின்றனர்.
இந்த விவகாரம் கணவர் பீரப்பாவிற்கு தெரியவந்திருக்கிறது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அவர், தனது மனைவி சுனந்தாவை அழைத்து கண்டித்து, சித்தப்பா கட்டனகேரியுடனான உறவைக் கைவிடும்படி வலியுறுத்தியுள்ளார். ஆனால், சுனந்தா திருமணத்தை மீறிய உறவைத் தொடர்ந்து வந்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, பீரப்பா சுனந்தாவைக் கடுமையாகத் தாக்கி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுனந்தா, தங்களது உறவுக்கு தடையாக இருக்கும் கணவரைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்.
இந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி இரவு பீரப்பா சாப்பிட்டுவிட்டு தனது அறையில் அசந்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, தனது காதலன் சித்தப்பாவை வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன்படி, சித்தப்பா தனது நண்பர் ஒருவருடன் சுனந்தாவின் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் மூவரும் சேர்ந்து வீட்டில் அசந்து தூங்கிக்கொண்டிருந்த பீரப்பாவைக் கழுத்தை நெரித்தும், அவரது பிறப்புறுப்பைத் தாக்கியும் கொலை செய்ய முயன்றிருக்கின்றனர். அப்போது செய்வதறியாது தவித்த பீரப்பா, அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்றிருக்கிறார். அப்போது அவரது மனைவி சுனந்தா, “அவனை விடாதே, முடித்துவிடு...” என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அவர், வீட்டில் இருந்த பிரிஜை எட்டி உதைத்துள்ளார். அதனால் பயங்கரமான சத்தம் ஏற்பட, வீட்டின் உரிமையாளர் ஓடிவந்து கதவைத் தட்டியிருக்கிறார்.
உடனடியாக தூங்கிக்கொண்டிருந்த பீரப்பாவின் 8 வயது மகன் திடீரென கண் விழித்து கதவைத் திறந்திருக்கிறார். அவர்கள் வீட்டுக்குள் நுழைய, சித்தப்பாவும், அவரது நண்பரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். உடனடியாக படுகாயமடைந்த பீரப்பாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த இண்டி டவுன் காவல்துறையினர், மனைவி சுனந்தாவைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதே சமயம், தலைமறைவாக இருக்கும் அவரது காதலன் சித்தப்பாவையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், தலைமறைவாக இருக்கும் சுனந்தாவின் காதலன் சித்தப்பா ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், “சுனந்தாவுடன் கடந்த இரண்டரை ஆண்டுகளாக உறவில் இருந்தேன். எங்களது வீடுகள் அருகருகே இருந்தன. ஒரு வருடத்திற்குப் பிறகு, அவர்கள் நிலத்தை விற்று இண்டி டவுன் நகருக்கு குடிபெயர்ந்தனர். இந்த வீடியோவை எல்லோரும் பகிர வேண்டும். நான் குற்றமற்றவன் என்று காவல்துறையிடம் கூறினால், அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சட்டம் பெண்களுக்கு ஆதரவாகவே இருக்கும். நான் இறந்தால், சுனந்தாவே முழு பொறுப்பு. இந்தக் கொலை முயற்சியை முழுக்க முழுக்க சுனந்தா மட்டுமே திட்டமிட்டு அரங்கேற்றினார். அவர் அழைத்ததன் பேரிலேயே நாங்கள் அங்குச் சென்றோம். மேலும், இந்தச் சம்பவத்தில் சுனந்தாவின் அண்ணனுக்கும் தொடர்பு இருக்கிறது. அவரையும் கைது செய்யுங்கள்” என்று பரபரப்பு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.
தொடர்ந்து சித்தப்பா மற்றும் அவரது நண்பர் இருவரையும் தேடும் பணியை காவல்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர். காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொல்ல முயன்ற சம்பவம் அந்தப் பகுதியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.