AI imager
உத்தரபிரதேச மாநிலம், ரேபரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 28 வயதான தினேஷ். இவருக்கும் சாதனா என்ற இளம்பெண்ணுக்கும் இடையே கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அதன்பிறகு, பணி நிமித்தமாக டெல்லிக்கு குடிபெயர்ந்த தினேஷ், அங்கு வாடகைக்கு ஒரு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். அத்துடன், தெற்கு டெல்லியில் உள்ள மருந்து நிறுவனத்தில் ஊழியராகவும் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த தினேஷ், மனைவி சமைத்து வைத்த இரவு உணவைச் சாப்பிட்டுள்ளார். பின்னர், உணவு உண்ட களைப்பில் உறங்க சென்றுள்ளார். அதிகாலை 3 மணியளவில், தினேஷின் உடலில் திடீரென கடும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக எழுந்து பார்த்தபோது, அருகே மனைவி சாதனா நின்று கொண்டு, கொதிக்கும் சூடான எண்ணெயை தினேஷின் மீது ஊற்றிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ந்துள்ளார்.
உடனே தினேஷ் கதறி துடிக்க, “நீ கத்தினால் இன்னும் எண்ணெய் ஊற்றுவேன்” என்று மனைவி சாதனா மிரட்டியிருக்கிறார். அத்துடன், ஏற்கெனவே எண்ணெய் ஊற்றி வெந்து போன இடத்தில், சிறிதும் இரக்கமின்றி மிளகாய்ப் பொடியையும் தூவியிருக்கிறார். எரிச்சலும் வலியும் தாங்க முடியாமல் தினேஷ் கதறியுள்ளார். அந்தச் சத்தம் கேட்டு ஓடி வந்த வீட்டின் உரிமையாளர், கதவை வேகமாகத் தட்டியிருக்கிறார். ஆனால், சாதனா கதவைத் திறக்க மறுத்து, மிளகாய்ப் பொடியை மீண்டும் தினேஷின் மீது தூவியுள்ளார்.
இதனிடையே, வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம்பக்கத்தினர் சேர்ந்து கதவைத் திறந்து வீட்டிற்குள் சென்றனர். பின்னர், படுகாயமடைந்த தினேஷை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். முகம், மார்பு உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தினேஷிடம் வாக்குமூலம் பெற்று வழக்குப் பதிவு செய்தனர்.
இது குறித்த விசாரணையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையில், தினேஷ் மீது மனைவி சாதனா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஆனால், அந்தப் புகாருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டு, மீண்டும் தினேஷுடன் சாதனா சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில், சமீப காலமாக இருவருக்கும் இடையே மீண்டும் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதனால், அடிக்கடி சண்டை ஏற்பட்டு, சில நேரங்களில் கைகலப்பாகவும் மாறியிருக்கிறது. இந்த நிலையில், கணவர் தினேஷ் மீதான கோபத்தில் மனைவி சாதனா கொதிக்கும் எண்ணெயை ஊற்றியது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மனைவி சாதனாவைக் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக கணவர் மீது மனைவி கொதிக்கும் சூடான எண்ணெயை ஊற்றிய சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.