தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று முன்தினம் (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக ஏராளமான மக்கள் அங்குக் கூடியதால் கடும் நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பலர் மயக்கமடைந்த நிலையில், 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தேசிய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, அருணா ஜெகதீசன் நேற்று (28.09.2025) மாலை 5 மணியளவில் தனது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியிருந்தார். இதைத் தொடர்ந்து, ஏ.டி.எஸ்.பி. தலைமையிலான 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பதிவுகளைப் பதிவு செய்த 25 சமூக வலைதளக் கணக்காளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சென்னை காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, இந்தச் சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி சகாயம், தவெகவைச் சேர்ந்த சிவநேசன், சரத்குமார் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, அசம்பாவிதம் நிகழும் என எச்சரித்த பிறகும் அதைக் கண்டுகொள்ளாமல் இருத்தல், கலவரத்தில் ஈடுபடுதல், தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் த.வெ.க.வினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. “விஜய் கைது செய்யப்படுவாரா?” என்ற கேள்விக்கு, விசாரணை ஆணையத்தின் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம், மதியழகன் இந்தப் பிரச்சார நிகழ்ச்சி முடிந்த உடனே, தனது செல்போன் எண்ணை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டுத் தலைமறைவாகியதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்தப் பிரச்சார நிகழ்ச்சிக்கு மதியழகனே அனுமதி கோரியதாகக் காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில், மதியழகனை காவல்துறையினர் இந்த வழக்குத் தொடர்பாகத் தேடியபோது, அவர் தலைமறைவாகியிருந்ததாகவும், நேற்று முன்தினம் இரவு முதல் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில், தனிப்படைப் போலீசார் நேற்று இரவு மதியழகனைக் கைது செய்தனர்.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மேலும் ஒருவரைக் கைது செய்துள்ளனர். கரூர் மத்திய மாநகர தவெகச் செயலாளர் பவுன்ராஜைப் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். கரூர் துயர சம்பவம் தொடர்பாக மதியழகன், பவுன்ராஜ் ஆகிய இருவரைக் கைது செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தவெகப் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கரூர் மாவட்டச் செயலாளர்கள் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கைது செய்யப்பட்ட தவெக மாவட்டச் செயலாளர் மதியழகனின் மனைவி, “என் கணவர் மீது சிறு கீறல் விழுந்தாலும், அதற்குக் காவல்துறையே பொறுப்பு” என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனது கணவர் கைது குறித்து காவல்துறை தன்னிடம் தெரிவிக்கவே இல்லை என்றும், “நானும் கூட்ட நெரிசலில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தேன்” என்றும் கூறியுள்ளார்.
“என் கணவர் கைது செய்யப்பட்ட செய்தி டிவியில் பார்த்தபோது தான் எனக்கே தெரிந்தது. என் கணவரிடம் நான் இன்னும் பேசவே இல்லை. அவருக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியவில்லை. தயவு செய்து அவரை என்னிடம் பேச வையுங்கள். அவர் கைது செய்யப்பட்டது குறித்து எந்த வீடியோ ஆதாரமும் வரவில்லை. அஜித்குமார் மாதிரி ஏதாவது பண்ணிடுவாங்களோ என்று பயமாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.
மேலும், “என் கணவருக்கு சிறு கீறல் ஏற்பட்டாலும், காவல்துறையே பொறுப்பு. அஜித்குமார் லாக்கப் டெத் போல் என் கணவருக்கு எந்தச் சூழலும் ஏற்பட்டுவிடக் கூடாது. என் கணவர் சட்டத்தை மதிப்பவர்” எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.