நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தாலுகா பெருங்கடம்பனூரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (36). இவர் கேட்டரிங் படித்துக் கொண்டிருந்தபோது, இதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரியான பரிமளா (34) என்பவரை 14 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன், இருவரும் வேலை தேடி பெருந்துறை காசிபிள்ளாம்பாளையத்திற்கு வந்தனர். ஸ்ரீதர் இப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் புரோட்டா மாஸ்டராக பணிக்கு சேர்ந்தார். பரிமளா காசிப்பில்லாம் பாளையத்தில் தனியாக ஸ்டுடியோவும், இ- சேவை மையமும் நடத்தி வந்தார்.

Advertisment

அப்போது மதுரை வாடிப்பட்டி, பெருமாள்பட்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் (42) என்பவருடன் பரிமளாவுக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் திருமணத்தை மீறிய உறவாக மாறியது. ஸ்ரீதருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அடிக்கடி பணம் கேட்டு மனைவி பரிமளாவுடன் தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 21 ஆம் தேதி மதுரையில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பரிமளா மட்டும் சென்றிருந்தார். இந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்த ஸ்ரீதரின் தம்பி புகழேந்தி, ‘ஏன் அண்ணன் வரவில்லை?’ என்று கேட்டுள்ளார். அப்போது பரிமளா கூறிய பதில் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் அவரை வற்புறுத்தி கேட்டபோது, தனக்கும் ஸ்ரீதருக்கும் ஏற்பட்ட சண்டையில் பிடித்து தள்ளியதில் கீழே விழுந்து இறந்து விட்டதாகவும், அவரது உடலை தனது ஆண் நண்பர் கார்த்திகேயனுடன் சேர்ந்து பெருந்துறை வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள ஒரு புதரில் தூக்கி வீசி விட்டு வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

Advertisment

இதையடுத்து ஸ்ரீதரின் தம்பி புகழேந்தி கொடுத்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து பெருந்துறை வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள புதரில் தேடிப் பார்த்தனர். அப்போது ஸ்ரீதரின் சடலம் முட்புதரில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அதனை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கணவர் கொலை செய்யப்பட்டதை போலீசார் அறிந்ததால், இருவரையும் கைது செய்து விடுவார்கள் என்று அஞ்சி ஆண் நண்பர் கார்த்திக்குடன் பரிமளா தலைமறைவானார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பரிமளா, கார்த்திகேயன் ஆகிய இருவரையும் ஈரோடு, மதுரை போன்ற பல்வேறு பகுதிகளிலும் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் பெருந்துறை கோவை ரோடு, பெரிய வேட்டுவபாளையம் பிரிவு அருகே நேற்று காலை நின்று கொண்டிருந்த போது போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து பரிமளா, கார்த்திகேயன் ஆகிய இருவரும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இது குறித்து நடைபெற்ற விசாரணையில், ஸ்ரீதருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் வேலைக்கு போகாமல் குடித்துவிட்டு மனைவி பரிமளாவுடன் தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது பெருந்துறை முதலிகவுண்டன் வலசு பகுதியில் வசித்து வரும் கார்த்திகேயனுடன் பரிமளாவுக்கும் தொடர்பு ஏற்பட்டு திருமணத்தை மீறிய உறவாக மாறியது. அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில், இவர்களது உறவுக்கு கணவர் ஸ்ரீதர் இடைஞ்சலாக இருப்பதாக இருவரும் கருதினர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீதரை சந்தித்த கார்த்திகேயன், அவரை தனது மோட்டார் பைக்கில் ஏற்றிக்கொண்டு முதலிகவுண்டன் வலசு பகுதியில் உள்ள ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத தோட்டத்து சாலைக்கு மது அருந்த சென்றுள்ளார்.

Advertisment

மது அருந்தியபடி இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஸ்ரீதரை, கார்த்திகேயன் தாக்கினார். அவரைப் பிடித்து கீழே தள்ளிய கார்த்திகேயன், தான் அணிந்திருந்த கருப்பு நிற டி-ஷர்ட்டை கழற்றி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி ஸ்ரீதரின் முகத்தால் மூடி கழுத்தை இறுக்கி கொலை செய்தார். பின்னர் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு தனது நண்பனின் காரை வாங்கிக் கொண்டு பரிமளாவிடம், ஸ்ரீதரை தான் கொலை செய்து விட்டதாகக் கூறி சடலம் கிடந்த சாலைக்கு பரிமளாவை அழைத்து வந்தார். கார்த்திகேயனும் பரிமளாவும் அங்கு கிடந்த ஸ்ரீதரின் சடலத்தை காரில் தூக்கி போட்டு பெருந்துறை வாய்க்கால் பகுதியில் உள்ள ஒரு முட்புதரில் வீசிவிட்டு சென்றுவிட்டனர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு பெருந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் சடலத்தை கொண்டு சென்ற கார், மோட்டார் பைக், டீ ஷர்ட், கத்தி போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பெருந்துறையில் நடைபெற்ற இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.