கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் உள்ள கூடாரம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரனின் மகன் மணிகண்டன். இவருக்கும், ராதாகிருஷ்ணனின் மகள் சந்தியா என்பவருக்கும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. மகிழ்ச்சியுடன் புது வாழ்க்கையைத் தொடங்கிய மணிகண்டனும் சந்தியாவும் இடையே அடிக்கடி பிரச்சனைகள் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

திருமணமான ஒரு மாதத்தில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்ததால், மணிகண்டனுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 6-ம் தேதி தனது விவசாய நிலத்திற்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற மணிகண்டன், நிலத்தில் வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தகவல் வீட்டில் இருந்த சந்தியாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு, வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை எடுத்து சந்தியாவும் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதைத் தொடர்ந்து, வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த சந்தியாவை உறவினர்கள் மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், கடந்த ஒரு மாதமாக கணவர் மணிகண்டனுடன் மனைவி சந்தியா சரியாக பேசவில்லை என்றும், இதனால் மனம் உடைந்த மணிகண்டன் தனது உயிரை மாய்த்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், கணவர் உயிரை மாய்த்துகொண்டதால் மனமுடைந்த மனைவி சந்தியா களைக்கொல்லி குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

Advertisment

திருமணமான ஒரே மாதத்தில் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அதனை பார்த்து மனைவி தற்கொலைக்குமுயன்ற சம்பவமும் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.