திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு அருகே அமைந்துள்ளது சின்ன கவுண்டனூர் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான அருள்பாண்டி. இவர் சொந்தமாக லாரி ஒன்றை வைத்து.. லோடு சப்ளை செய்யும் தொழிலை செய்து வருகிறார். அருள்பாண்டியும் அதே பகுதியைச் சேர்ந்த அம்மு என்ற பெண்ணும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

Advertisment

நன்றாக போய்க்கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கையில்.. திடீரென அரங்கேறிய ஒரு சம்பவம் தான்.. இவர்களுடைய வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. மனைவியும் குழந்தைகளும் தான் தன்னுடைய உலகம் என வாழ்ந்துவந்த அருள்பாண்டி திடீரென தடம் மாற தொடங்கினார். அருள்பாண்டிக்கும், அம்முவின் நெருங்கிய உறவினர் ஒருவரது மனைவிக்கும்.. ஒரு குடும்ப நிகழ்ச்சியில் பார்த்துக்கொண்டபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த உறவுக்கார பெண்ணும் ஏற்கனவே திருமணமானவர்தான். சாதாரணமாக தொடங்கிய இந்த உறவு.. நாளடைவில் நெருக்கமாகி திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதனால் அருள்பாண்டியும் அவரது காதலியும் அடிக்கடி சந்தித்து தனிமையில்  இருந்து வந்துள்ளனர்.

இந்த திடீர் பழக்கத்தால் அருள்பாண்டி தனது குடும்பத்தையே வெறுக்கும் அளவிற்கு சென்றிருக்கிறார். நாளடைவில், இதை தெரிந்துகொண்ட அம்முவும் அவரது குடும்பத்தினரும் உறவுக்கார பெண்ணுடன் ஏற்பட்ட திருமணத்தை மீறிய உறவை கைவிடுமாறு கூறி அருள்பாண்டியை கண்டித்துள்ளனர். ஆனால், அந்த உறவை  கைவிட மறுத்த அருள்பாண்டி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு ரகசியமாக குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்த சூழலில், கடந்த 22ம் தேதி இரவு அருள்பாண்டி தனது இரண்டாவது மனைவியை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். அதுமட்டுமின்றி, "இனிமேல் இவள் என்னுடன் தான் வாழ்வார்’ என அம்முவிடம் கூறியிருக்கிறார். இதனால் கணவன் மனைவிக்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஆனாலும், அருள்பாண்டி தன்னுடைய இந்த தவறான முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அம்மு.. அதிர்ச்சி முடிவு ஒன்றை எடுத்தார். அன்றைய தினம் அனைவரும் தூங்கிவிட்ட பிறகு, நேராக வீட்டு மாடிக்கு சென்ற அம்மு.. விஷம் குடித்து தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளார்.  வெகு நேரமாகியும் அவர் கீழே வராததால் குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தபோது.. அம்மு விஷம் குடித்து மயங்கியது தெரிய வந்தது. இதை பார்த்து அதிர்ந்து போனவர்கள், அம்முவை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை போலீசார்.. சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Advertisment

மேலும், அம்முவின் தாயார் ஆனந்தி கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிந்து, தற்கொலைக்கு காரணமான கணவன் அருண்பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.