கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தைச் சேர்த்தவர் பரமேஷ் (வயது 50). இவர் தினக் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், தனது வீட்டில் மனைவி ஆஷாவுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில், பரமேஷ் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி இரவு உயிரிழந்தார். அவர் மாரடைப்பில் இறந்துவிட்டதாக அவரது மனைவி உறவினர்களிடத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து இறுதிச் சடங்குகளை நடத்தி, மறுநாள் அவரது உடலை  அடக்கம் செய்தனர். 

Advertisment

இந்த சம்பவம் முடிந்து ஒரு மாதம் கழித்து, கடந்த பிப்ரவரி 19ஆம் நாளன்று அவரது வீட்டில் சமையல் வேலை பார்த்து வந்த சந்திரப்பாவை (வயது 48), ஆஷா திருமணம் செய்துகொண்டார். இது, பரமேஷின் சகோதரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரது சகோதரிகளுக்கு பரமேஷின் மரணம் இயற்கையானது தானா? சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, அவரது சகோதரிகளில் ஒருவர், காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில்,  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் பரமேஷின் சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினார். 

Advertisment

இதில், அவர் மாரடைப்பால் இறக்கவில்லை என்றும் மாறாக மூச்சுத்திணறல் மூலமாக இறந்ததாகவும் தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் இந்த வழக்கின் விசாரணையைத் தீவிரப் படுத்தினர். குறிப்பாக, ஆஷா மற்றும் சந்திரப்பா ஆகியோரிடையே விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. இந்த விசாரணையில், அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, "பரமேஷ் தூங்கிக் கொண்டிருந்தபோது, தலையணையால் அழுத்தி மூச்சுத் திணறடித்து, அவரை கொலை செய்துள்ளனர். பின்பு,  வேண்டுமென்றே மாரடைப்பு ஏற்பட்டதாகப் பொய்க் கதைகளைக் கூறி உறவினர்கள் அனைவரையும் நம்ப வைத்துள்ளார்கள்" என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்ட இருவரும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு, சிறையிலடைக்கப்பட்டனர். மேலும், சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.