கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அருகே அமைந்துள்ள வேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு, அரிசி ஆலை அருகே சொந்தமாக மாந்தோப்பு உள்ளது. அந்த மாந்தோப்பில், கடந்த 28-ம் தேதி வடமாநிலத் தொழிலாளி ஒருவர் சடலமாகக் கிடந்தார். இது குறித்து தகவலறிந்த கல்லாவி போலீசார், தொழிலாளியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனிடையே, போலீசார் நடத்திய விசாரணையில், அங்கு சடலமாகக் கிடந்தவர் கழுத்து நெறித்துக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில், பல மர்மமான காட்சிகள் அதில் பதிவாகியிருந்தது. மேலும், அந்தக் காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், புர்வி சாம்பரன் பகுதியைச் சேர்ந்தவர் முன்னா மஞ்சி. 32 வயதான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சரோஜ் தேவி என்பவருக்கும் திருமணமாகி, 2 ஆண் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தங்களுடைய குழந்தைகளுடன், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு வேலைத் தேடி வந்துள்ளனர். மேலும், திருப்பூர், காங்கேயம், ஈரோடு, கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தங்கி, அங்கு கிடைக்கும் வேலைகளைச் செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கேயம் பகுதியில் வேலை செய்யும்போது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவருடன் சரோஜ் தேவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் நெருக்கமாகி, திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இதையடுத்து, கணவர் முன்னா மஞ்சி வீட்டில் இல்லாத நேரத்தில், சரோஜ் தேவி தனது காதலனை வரவழைத்து தனிமையில் இருந்து வந்துள்ளார்.
இந்தச் சூழலில், காண்ட்ராக்டர் ஒருவர் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், வேலம்பட்டியில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் வேலை இருப்பதை அறிந்து, கடந்த 26-ம் தேதி முன்னா மஞ்சி தனது மனைவி சரோஜ் தேவி மற்றும் 4 குழந்தைகளுடன் வேலம்பட்டிக்கு வந்துள்ளார். ஆனால், சரோஜ் தேவியைப் பிரிய மனமில்லாத முகேஷ், அவர்களுடனேயே வேலம்பட்டியில் உள்ள சக்திவேல் அரிசி ஆலைக்கு வேலைக்கு வந்துள்ளார். அவர்களுக்கு அரிசி ஆலையின் அருகிலேயே இருப்பது போன்ற 2 அறைகள் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், 27-ம் தேதி இரவு, முன்னா மஞ்சி தனது குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது, அறையை விட்டு வெளியே வந்த சரோஜ் தேவி, பக்கத்து அறையில் இருந்த முகேஷுடன், அந்தப் பகுதியில் இருந்த இருட்டான இடத்திற்குச் சென்று தனிமையில் இருந்துள்ளார். மேலும், சிறிது நேரம் கழித்து இவர்கள் இருவரும் திரும்ப அவரவர் அறைகளுக்குச் சென்றனர். இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், திடீரென கண் விழித்த முன்னா மஞ்சி, மனைவி சரோஜ் தேவியிடம் "இவ்வளவு நேரம் எங்கு சென்றிருந்தாய்?" என வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனையெல்லாம் ஒன்றும் தெரியாதது போல, அருகில் இருந்த அறையில் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்த முகேஷ், சமாதானம் செய்வது போல அவர்களின் அறைக்கு வந்துள்ளார். அந்த நேரத்தில், "எங்கு சென்றாய்?" என மனைவியிடம் கேட்டு, சரோஜ் தேவி தனது கணவரை அழைத்துக்கொண்டு அருகிலுள்ள மாந்தோப்பிற்குச் சென்றுள்ளார். அப்போது, அவர்களுடன் பின்னால் அவரது நண்பர் முகேஷும் சென்றுள்ளார். அந்த நேரத்தில், தங்களுடைய உறவுக்கு இடையூறாக இருந்த முன்னா மஞ்சியை, சரோஜ் தேவியும் அவரது காதலன் முகேஷும் சேர்ந்து துண்டுவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். பின்னர், அவரது சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு, சரோஜ் தேவியும் முகேஷும் சேர்ந்து நான்கு குழந்தைகளுடன் கல்லாவி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அப்போது, சரோஜ் தேவி மற்றும் அவரது குழந்தைகளை ரயிலில் ஏற்றி காங்கேயம் அனுப்பிவைத்துள்ளார் முகேஷ். ஆனால், அவர் ரயில் நிலையத்திலேயே பதுங்கியிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் முகேஷின் செல்போன் டவர் லொகேஷனை வைத்து கல்லாவி ரயில் நிலையத்தில் அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், சரோஜ் தேவியுடனான உறவையும், முன்னா மஞ்சியை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார்.
தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சரோஜ் தேவியின் செல்போன் டவர் லொகேஷனை வைத்து, ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டில் இருந்த சரோஜ் தேவியையும் கைது செய்தனர். திருமணத்தை மீறிய உறவால் கணவனை கொலை செய்து, தனது 4 குழந்தைகளையும் அனாதைகளாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.