தர்மபுரி மாவட்டம், அரூர் கீரைப்பட்டியைச் சேர்ந்தவர் 43 வயதான ரசூல். இவரது மனைவி 35 வயதான அம்முபீ. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஓட்டுநராகப் பணியாற்றி வந்த ரசூல், அமமுக மாவட்ட சிறுபான்மைப் பிரிவு துணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார்.

இதனிடையே, அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வரும் லோகேஸ்வரன் (26) என்ற இளைஞருடன் அம்முபீக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் இருவருக்கும் இடையே நெருக்கத்தை அதிகரிக்க, பின்னர் அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. அதனால், இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியும், தனிமையில் சந்தித்தும் வந்துள்ளனர்.

இந்த நிலையில், ரசூல் லோகேஸ்வரனின் சலூன் கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, மனைவி அம்முபீ லோகேஸ்வரனுடன் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ந்துள்ளார். பின்னர், இது குறித்து விசாரித்தபோது, அம்முபீக்கும் லோகேஸ்வரனுக்கும் திருமணத்தை மீறிய உறவு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த ரசூல், லோகேஸ்வரனை கடுமையாகத் தாக்கியுள்ளார். பின்னர், அதே ஆத்திரத்தில் வீட்டிற்கு வந்த ரசூல், மனைவியையும் கண்டித்து கடுமையாகத் தாக்கியிருக்கிறார்.

இந்தச் சூழலில், கடந்த ஜூலை 5 ஆம் தேதி இரவு உணவு அருந்திவிட்டு தூங்கச் சென்ற ரசூலுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர், அவரது உறவினர்கள் ரசூலை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன்பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, அவரது ரத்த மாதிரிகளை ஆய்வு செய்தபோது, ரசூல் சாப்பிட்ட உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த ரசூலுக்கு, மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

இதையடுத்து, உறவினர் ஒருவர் மூலம் மனைவி அம்முபீயின் செல்போனைச் சோதித்துப் பார்க்கும்படி கூறியிருக்கிறார். அதில், அம்முபீ லோகேஸ்வரனுடன் தனிமையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இருந்துள்ளன. மேலும், அதில் இருந்த ஆடியோ ஒன்றைக் கேட்டு, ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அந்த ஆடியோவில், “பூச்சி மருந்தை மாதுளை ஜூஸ்ல கலந்து கொடுத்தேன். ஆனா, அவன் குடிக்க மாட்டனுட்டான் அதுனால், ஜூஸ் மேல இருந்த தண்ணீய மட்டும் கீழஊத்திட்டுஅடியிலதங்கியிருந்த மருந்த சாப்பாட்டுல கலந்து கொடுக்கட்டுமா? ” என்று அம்முபீலோகேஸ்வரனிடம் கேட்டுள்ளார். 

இதன் அடிப்படையில், ரசூல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருமணத்தை மீறிய உறவுக்கு கணவர் ரசூல் இடையூறாக இருந்ததால், லோகேஸ்வரனுடன் சேர்ந்து அம்முபீ கொலை முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சேலம் தனியார் மருத்துவமனையிலிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரசூல், 18 ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமணத்தை மீறிய உறவுக்குஇடையூறாக இருந்த கணவரை மனைவியே விஷம் வைத்து கொன்ற சம்பவம் அந்த பகுதியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.