உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டம், உலு கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில். அவரது மனைவி ஷாஷி. இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த யத்வேந்திரா என்ற இளைஞருக்கும் இடையே முதலில் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. கணவர் சுனில் வெளியே வேலைக்குச் சென்ற பிறகு, ஷாஷியும் அவரது ஆண் நண்பர் யத்வேந்திராவும் அதிக நேரம் செல்போனில் பேசி வந்துள்ளனர். நாளடைவில் இந்தப் பழக்கம் இருவருக்கும் இடையே நெருக்கத்தை அதிகரிக்க, பின்னர் அது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியிருக்கிறது.
Advertisment
அதன் காரணமாக, இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் இருந்துள்ளனர். இந்த நிலையில், இந்த விவகாரம் கணவர் சுனிலுக்கு தெரியவந்ததும், உடனே மனைவி ஷாஷியை அழைத்து கண்டித்துள்ளார். இருப்பினும், யத்வேந்திராவுடனான உறவைக் கைவிட மனமில்லாத ஷாஷி, தொடர்ந்து உறவு வைத்திருக்கிறார். இதனால், சுனிலுக்கும் அவரது மனைவி ஷாஷிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த ஷாஷி, தனது திருமணத்திற்கு மீறிய உறவிற்குத் தடையாக இருக்கும் கணவரைத் தீர்த்துக்கட்ட முயற்சி செய்திருக்கிறார்.
Advertisment
அதன்படி, ஆண் நண்பர் யத்வேந்திராவுடன் சேர்ந்து இணையத்தில் 150 ரூபாய்க்கு விஷ மருந்தை வாங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, கடந்த மே மாதம் 13- ஆம் தேதி, கணவர் சுனிலுக்கு ஷாஷி தயிரில் விஷ மருந்தைக் கலந்து கொடுத்துள்ளார். இதனால் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. உடனே, தாய் ராம் தகேலியும் அவரது உறவினர்களும் சுனிலை மீட்டு அருகிலுள்ள சிறிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டவுடன், அன்று மாலையில் வீடு திரும்பியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, கணவர் உயிர் பிழைத்த ஆத்திரத்தில் இருந்த ஷாஷி, தனது ஆண் நண்பர் யத்வேந்திராவுடன் மீண்டும் திட்டம் தீட்டியிருக்கிறார். அதில், மீண்டும் விஷ மருந்தை அதிகளவில் கலக்குமாறு யத்வேந்திரா கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, மறுநாள், அதாவது மே 14-ஆம் தேதி, கிச்சடியில் விஷ மருந்தைக் கலந்து சுனிலுக்கு கொடுத்துள்ளார். அதைச் சாப்பிட்டவருக்கு உடல்நிலை மோசமடைந்து, பின்னர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.
Advertisment
இதைத் தொடர்ந்து, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அஞ்சலி செலுத்தப்பட்டு, பின்னர் இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. அதன்பிறகு, சில நாட்களிலேயே ஷாஷி மகிழ்ச்சியாக இருந்துள்ளார். இதைப் பார்த்த சுனிலின் தாய் ராம் தகேலிக்கும் குடும்பத்தாருக்கும், ஷாஷியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர், அதே பகுதியைச் சேர்ந்த யத்வேந்திரா என்ற இளைஞருடன் ஷாஷி உறவு வைத்திருந்ததும் தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து, மகன் சுனிலின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உணர்ந்த தாய் ராம் தகேலி, காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தினர். அதில், மனைவி ஷாஷியிடம் விசாரித்தபோது, முதலில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்திருக்கிறார். இருப்பினும், காவலர்கள் நடத்திய தொடர் விசாரணையில், திருமணத்திற்கு மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததால், தனது கணவர் சுனிலை ஆண் நண்பர் யத்வேந்திராவுடன் சேர்ந்து விஷம் வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருமணத்திற்கு இடையூறாக இருந்த கணவரை கொன்ற விவகாரத்தில், இரண்டு மாதங்களுக்கு பிறகு மனைவியும் அவரது ஆண் நண்பரும் தற்போது கைதாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.