கடலூர் மாவட்டம், நெய்வேலி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் 62 வயதான கொளஞ்சியப்பன். இவர் ஏற்கனவே திருமணமானவர். ஆனால், முதல் மனைவி உயிரிழந்ததால், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பத்மாவதி என்ற பெண்ணை மறுமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி, அவர் கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறார். மகன் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். என்.எல்.சி.யில் வேலை செய்து வந்த கொளஞ்சியப்பன், பணி ஓய்வு பெற்ற பிறகு, நெய்வேலியில் உள்ள ஒரு துணிக்கடையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் கொளஞ்சியப்பனுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்தப் பழக்கம் இருவருக்கும் இடையே நெருக்கத்தை அதிகரிக்க, அது திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இந்த விவகாரம் மனைவி பத்மாவதிக்குத் தெரியவந்ததும், இருவருக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது..
அந்த வகையில், இரு தினங்களுக்கு முன் கணவன்-மனைவி இடையே இதுகுறித்து தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, "அடிக்கடி இதுகுறித்து கேட்டால், உன்னைக் கொலை செய்துவிட்டு, வீட்டை அவள் பெயருக்கு எழுதிவைத்துவிடுவேன்" என்று கொளஞ்சியப்பன் மனைவியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், பத்மாவதி கணவன் மீது கடும் ஆத்திரத்தில் இருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு கொளஞ்சியப்பன் வீட்டில் அசந்து தூங்கியபோது, கணவன் மீது கோபத்தில் இருந்த பத்மாவதி, வீட்டில் இருந்த கடப்பாரையை எடுத்து அவரது தலையில் தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் கொளஞ்சியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விடியற்காலை வரை தனது கணவரின் உடலுடன் தனியாக இருந்த பத்மாவதி, சென்னையில் உள்ள தனது மகனுக்கு தொலைபேசியில் நடந்த சம்பவம் குறித்துத் தெரிவித்தார்.
பின்னர், மகன் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கொளஞ்சியப்பனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையே, சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட கடலூர் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், சம்பவத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். இதையடுத்து, பத்மாவதியைக் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டு வந்த கணவரை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த மனைவியின் செயல் கடலூர் மாவட்டத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.