Advertisment

“அக்கா நீ சந்தோசமா இரு...’; மாமாவை முடித்த மச்சான் - பாசமலர்களின் வில்லங்க விளையாட்டு!

4

சரத் - ராஜா - மனைவி - கணவன்

கிருஷ்ணகிரி அடுத்த எண்ணேகோள்புதூர் தென்பெண்ணை ஆற்று மேம்பாலம் அருகே கடந்த 21-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக குருபரப்பள்ளி போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவரை அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் விபத்தில் சிக்கியவர் அதே பகுதியைச் சேர்ந்த ரகுபதி என்பது தெரியவந்தது. இந்நிலையில் ரகுபதியின் மனைவி சந்திரா கொடுத்த புகாரின் பேரில் விபத்து வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரகுபதி 23-ம் தேதி மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை இதுவரை ஏன் கண்டுபிடிக்கவில்லை எனக்கூறி ரகுபதியின் உறவினரான நாகராஜ் உள்ளிட்டோர் குருபரப்பள்ளி போலீசாரிடம் கேள்வி எழுப்பினர்.

Advertisment

அப்போது போலீசார், “காரை கண்டுபிடித்து விட்டோம். பந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ராமசந்திரனுக்கு சொந்தமான காரை ஒட்டையனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் எடுத்துச் சென்றுள்ளார். காரையும் பறிமுதல் செய்து விட்டோம்” என்று கூறினர். உடனே, “ராஜாவா? அவன் இறந்த ரகுபதியின் மச்சான் தான். அவனுக்கும் ரகுபதிக்கும் பணம் சம்பந்தமாகப் பிரச்சினை இருந்தது. அதனால் ராஜா தான் கொலை செய்துள்ளான். அவனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்” எனக்கூறி 24-ம் தேதி காலை நாகராஜ் தலைமையில் உறவினர்கள் 30-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. முரளி தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களிடம் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சந்தேகம் இருப்பதாகப் புகார் அளிக்கக் கூறியதை அடுத்து உறவினர் நாகராஜிடம் புகாரைப் பெற்று விசாரணையைத் தொடங்கினர். பின்னர் பிரேதப் பரிசோதனை முடிந்து கிராமத்திற்கு வந்த ரகுபதியின் உடலை அடக்கம் செய்யாமல், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்; இல்லையென்றால் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என்று போராட்டம் நடத்தினர். போலீசார் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததையடுத்து ரகுபதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து சந்தேகத்திற்குரிய ரகுபதியின் மனைவி சந்திராவின் தம்பி ராஜாவைப் பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் வெளியான தகவல்கள் போலீசாரையே திக்குமுக்காட வைத்தன.

எண்ணேகோள்புதூர் பகுதியைச் சேர்ந்த சமையல் மாஸ்டரான ரகுபதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சந்திராவுக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். சந்திராவின் தம்பி ராஜா திருமணமாகி மனைவியின் ஊரான சூளகிரி அடுத்த ஒட்டையனூரில் தங்கி டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அக்கா சந்திராவிடம் நைசாக பேசிய தம்பி ராஜா, “பிசினஸ் செய்யப் பணம் வேண்டும், கார் ஒன்றும் ஈச்சர் வாகனம் ஒன்றும் வேண்டும், என் பெயரில் லோன் தர மறுக்கிறார்கள். அதனால் மாமாவிடம் பேசி லோன் வாங்கித் தந்தால் நானே மாதாமாதம் தவணை கட்டிக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதை நம்பிய அக்கா சந்திரா ரகுபதி பெயரில் வீடு ஒன்றுக்கு சேல் அக்ரிமென்ட் போட்டு ஓசூரில் உள்ள முத்தூட் ஃபைனான்ஸில் 38 லட்சம் ரூபாய் கடன் வாங்கித் தம்பி ராஜாவுக்குக் கொடுத்தார். அதேபோல் ரகுபதி பெயரிலேயே சேலத்தில் உள்ள தனியார் வங்கியில் 20 லட்சம் ரூபாய் லோன் வாங்கி புதிய இன்னோவா கார் ஒன்றும் கோட்டக் மகேந்திரா வங்கியில் 18 லட்ச ரூபாய் லோன் வாங்கி ஈச்சர் வாகனம் ஒன்றையும் ரகுபதி பெயரிலேயே பதிவு செய்து ராஜாவிற்குக் கொடுத்திருக்கிறார்.

இப்படி கிட்டத்தட்ட 80 லட்சம் ரூபாய் கடனை ரகுபதி பெயரிலேயே வாங்கிய ராஜா தான் கூறியபடி மாதத் தவணையைச் சரிவரச் செலுத்தவில்லை. இதனால் வங்கி ஊழியர்கள் ரகுபதிக்குப் போன் செய்து பணம் கட்டக் கூறியுள்ளனர். இதனால் ரகுபதிக்கும் மனைவி சந்திராவுக்கும் தகராறு ஏற்பட்டது. ஒவ்வொரு மாதமும் தவணை கட்டும்போதெல்லாம் கணவன்-மனைவிக்கு தகராறு ஏற்பட்டதால் தம்பி ராஜாவை அழைத்த சந்திரா, “இதற்கு ஒரு முடிவு கட்டு, என்னால தாங்க முடியல, இவனோடு வாழவே முடியல, டெய்லி குடிச்சிட்டு வந்து இந்த லோன் பிரச்சினையையே பேசுறான்” என ஆவேசமாகக் கூறியிருக்கிறார். அதற்கு ராஜா, “உன் புருசன் இருந்தாதான் லோன் தவணை கேப்பாங்க, அவன் இல்லேன்னா லோனையே க்ளோஸ் பண்ணிடுவாங்க. அதுமட்டுமில்லாம உன் புருசன் ஏதாவது ஒரு விபத்துல இறந்துட்டா இன்சூரன்ஸ் பணமும் வரும். அதனால உன் புருசனைக் காலி பண்ணிடலாம். நீ சந்தோஷமா இரு, நான் பாத்துக்கிறேன்” எனக்கூறிச் சென்றுள்ளார்.

இதையடுத்து தனது பிளான்படி ராஜா 20-ம் தேதி மது அருந்திவிட்டு பந்தாரப்பள்ளியைச் சேர்ந்த தொழில் நண்பர் ராமசந்திரனிடம் சென்று, “உன்னுடைய காரைக் கொடு, ஊருக்குச் சென்றுவிட்டு காலையில் வந்து கொடுத்துவிடுகிறேன்” எனக்கூறி காரை எடுத்து வந்துள்ளார். பின்னர் தனது உறவினரான காவேரிப்பட்டினம் அடுத்த சாப்பர்த்தி பகுதியைச் சேர்ந்த சரத்குமாருக்கு போன் செய்து, “எங்க இருக்கிற? வா, சரக்கு அடிக்கப் போலாம்” என ராஜா அழைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே சரத்குமார் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ராஜாவின் காரில் ஏறினார். இருவரும் பெத்தாளப்பள்ளி, பின்னர் பாஞ்சாலியூர் பகுதிகளுக்குச் சென்று ஒன்றாக மது அருந்தியுள்ளனர். போதையில் சோகமாகப் பேசுவது போல நடித்த ராஜா, “அக்கா சந்திராவை மாமா ரகுபதி தினமும் அடித்துத் துன்புறுத்துறான். அதனால் ரகுபதியைக் காரை ஏற்றிக் கொலை செய்துவிடலாம். நீயும் வா” என சரத்குமாரை அழைத்திருக்கிறார். மேலும், “நீ துணைக்கு வந்தால் உனக்கு இருக்கும் 7 லட்சம் ரூபாய் கடனையும் அடைத்துவிடுகிறேன். மாமா செத்தால் வரும் இன்சூரன்ஸ் பணத்தை நாம் இருவரும் பிரித்துக் கொள்ளலாம்” என ஆசை வார்த்தைகளை அள்ளி தெளித்திருக்கிறார்.

அந்த ஆசை வார்த்தைக்கு மயங்கிய சரத்குமாரும் “சரி, போகலாம்” என்று ஒப்புக் கொண்டுள்ளார். எண்ணேகோள்புதூர் அருகே சென்று அங்கிருந்து சரத்குமாரின் செல்போனில் ரகுபதிக்கு அழைப்பு விடுத்து, “குருபரப்பள்ளி அருகே ஈச்சர் லாரியை போலீசார் பிடித்து விட்டார்கள். வாகனம் உன் பெயரில் இருப்பதால் நீ வந்தால்தான் விடுவார்கள், சீக்கிரம் வா” என ராஜா தனது நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்திருக்கிறார்.

குடிபோதையில் இருந்த ரகுபதி முதலில் தூங்கிவிட்டார். மீண்டும் அழைத்தும் வரவில்லை. பின்னர் 21-ம் தேதி அதிகாலை 3 மணியளவில் ரகுபதி வீட்டிற்கே சென்ற ராஜா தூங்கிக் கொண்டிருந்த மாமாவை எழுப்பி, “நீ வந்தாதான் போலீஸ் வண்டியை விடுவார்கள்” எனக்கூறியிருக்கிறார். ரகுபதியும் இருசக்கர வாகனத்தில் குருபரப்பள்ளி நோக்கிச் சென்றார். பின்னாலேயே ராஜாவும் சரத்குமாரும் காரில் சென்றிருக்கின்றனர்.

எண்ணேகோள்புதூர் தென்பெண்ணை ஆற்று மேம்பாலம் அருகே வந்தபோது காரை வேகமாக ஓட்டி ரகுபதியின் வாகனத்தின் பின்புறம் மோதி விபத்தை ஏற்படுத்தினர். படுகாயமடைந்து தரையில் விழுந்து கிடந்த ரகுபதியின் தலையில் இரும்பு ராடால் சரமாரியாக அடித்துள்ளனர். ஏற்கெனவே மது போதையில் இருந்ததாலும் தலையில் அடிபட்டதாலும் ரத்த வெள்ளத்தில் மயக்கமடைந்த ரகுபதியை இறந்துவிட்டதாக நினைத்து இருவரும் தப்பி ஓடினர் என்று விசாரணையில் ராஜாவும் சரத்குமாரும் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மனைவி சந்திரா, தம்பி ராஜா, உறவினர் சரத்குமார் ஆகிய மூவரையும் குருபரப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

பாசத்திற்காக செய்தாலும், பணத்திற்காக செய்தாலும், பழக்க வழக்கத்திற்காக செய்தாலும் குற்றம் கேடு தரும்...

Krishnagiri police sister
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe