கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டம், ஸ்ரீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட ரமணா. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 35 வயது கதிரம்மாவிற்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்தத் தம்பதியருக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், வெங்கட ரமணாவிற்கும் கதிரம்மாவிற்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவ்வப்போது கைகலப்பு ஏற்பட்டதால், இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளாமல் ஒரே வீட்டில் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
கணவருடன் கருத்து வேறுபாடு இருந்த கதிரம்மாவிற்கு, பக்கத்து வீட்டு இளைஞர் வேணுவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இது திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசுவதும், கணவர் இல்லாத நேரத்தில் ஒன்றாக வெளியே சென்று ஊர் சுற்றுவதும், தனிமையில் சந்தித்து நேரம் செலவிடுவதுமாக இருந்துள்ளனர்.
இந்தச் சூழலில், ஒரு நாள் வேலை முடிந்து வீடு திரும்பிய வெங்கட ரமணாவிற்கு, கதிரம்மா உணவு சமைக்காமல், நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கட ரமணா, “வேலைக்குப் போய் வந்த எனக்கு உணவு கூட சமைத்து கொடுக்காமல், யாருடன் இவ்வளவு நேரம் போனில் பேசிக் கொண்டிருக்கிறாய்?” என்று கோபமாகக் கத்தியுள்ளார். ஆனால், கதிரம்மா அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்தார்.
இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற வெங்கட ரமணா, மனைவி பேசிக் கொண்டிருந்த செல்போனைப் வாங்கி பார்த்துள்ளார். அதில், பக்கத்து வீட்டு இளைஞர் வேணுவுடன் கதிரம்மா பேசியது தெரியவந்தது. மேலும், தீர விசாரித்தபோது, இருவருக்கும் இடையேயான திருமணத்தை மீறிய உறவு வெங்கட ரமணாவிற்குத் தெரியவந்துள்ளது. உடனடியாக மனைவியைத் தாக்கி, வேணுவுடனான உறவைக் கைவிடுமாறு எச்சரித்துள்ளார். ஆனால், கதிரம்மா அந்த உறவைத் தொடர்ந்தார். இதனால், இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று வெங்கட ரமணாவிற்கும் அவரது மனைவி கதிரம்மாவிற்கும் வேணு தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, வெங்கட ரமணா கதிரம்மாவை கடுமையாகத் தாக்கியுள்ளார். இதுகுறித்து கதிரம்மா தனது காதலன் வேணுவிடம் தெரிவித்துள்ளார். பின்னர், “வெங்கட ரமணா உயிருடன் இருந்தால், நாம் சந்தோஷமாக இருக்க முடியாது. அவன் எப்போதும் நமக்கு இடையூறாக இருப்பான். அவனைத் தீர்த்துக் கட்டிவிடுவோம்” என்று வேணுவும் கதிரம்மாவும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இரவு வெங்கட ரமணா ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது, கதிரம்மா வேணுவை வீட்டிற்கு அழைத்து, இருவரும் சேர்ந்து வெங்கட ரமணாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர், உடலை ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு வேணுவின் காரில் எடுத்துச் சென்றுள்ளனர். முதலில், உடலை எரிக்கத் திட்டமிட்டிருந்தாலும், பொருத்தமான இடம் கிடைக்காததால், இரண்டு நாட்கள் உடலை காரிலேயே வைத்து கோலார் மாவட்டம் முழுவதும் சுற்றியுள்ளனர். பின்னர், எரிக்கும் முடிவைக் கைவிட்டு, ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு காட்டுப் பகுதிக்கு காருடன் சென்று, உடலை அங்கேயே காருடன் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அதன் பிறகு, இருவரும் வீட்டிற்குத் திரும்பி, வழக்கம்போல் தங்களது வேலைகளைப் பார்க்கத் தொடங்கினர்.
இதற்கிடையே, ஆள் நடமாட்டமில்லாத காட்டுப் பகுதியில் கார் சென்ற வழித்தடத்தை, அப்பகுதியில் ரோந்து சென்ற காவல்துறையினர் கண்டறிந்தனர். அந்த வழித்தடத்தைப் பின்தொடர்ந்து சென்றபோது, காட்டுக்குள் ஒரு கார் தனியாக நிற்பதைக் கண்டனர். அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதால், காவல்துறையினர் காரைத் திறந்து பார்த்தனர். அதில், அழுகிய நிலையில் வெங்கட ரமணாவின் உடல் இருந்தது. உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
காரின் பதிவு எண்ணை வைத்து, அதன் உரிமையாளர் வேணு என்பவரை காவல்துறையினர் கண்டறிந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததால், கதிரம்மாவும் வேணுவும் சேர்ந்து வெங்கட ரமணாவைக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருமணத்தை மீறிய உறைவின் காரணமாக காதலனுடன் சேர்ந்து கணவரை மனைவியே கொன்ற சம்பவம் கோலார் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.