ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பாதபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் 27 வயதான நல்லி ராஜூ. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 25 வயது மௌனிகா என்ற பெண்ணுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், மௌனிகாவிற்கு அதே ஊரைச் சேர்ந்த உதயகுமார் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர், இந்தப் பழக்கம் இருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவாக மாறியது. இதனால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து சந்தோஷமாக இருந்து வந்தனர். இந்த விவகாரம் கணவர் நல்லி ராஜூவுக்கு தெரியவந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், மனைவியை அழைத்து உதயகுமாருடனான உறவை முறித்துக் கொள்ளுமாறு கண்டித்திருக்கிறார். ஆனால், இதைப் பொருட்படுத்தாமல் மௌனிகா, உதயகுமாருடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார்
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி வெளியே சென்ற நல்லி ராஜூ வீட்டிற்குத் திரும்பவில்லை என்று அவரது மனைவி மௌனிகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், காணாமல் போன நல்லி ராஜூவைத் தீவிரமாகத் தேடி வந்தனர். மறுநாள் (ஆகஸ்ட் 6-ஆம் தேதி), குடியிருப்பு பகுதிக்கு அருகே நல்லி ராஜூவின் உடல் சடலமாகக் கிடந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், உதயகுமார் தனது இருசக்கர வாகனத்தில் ஒரு மூட்டையை வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. அதன்பேரில், அவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
விசாரணையில், மௌனிகாவின் திருமணத்தை மீறிய உறவு காரணமாக அவருக்கும் கணவர் நல்லி ராஜூவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், மௌனிகாவால் உதயகுமாரை விட்டுக்கொடுக்க முடியவில்லை. இதனால், தங்களது உறவுக்கு இடையூறாக இருந்த கணவர் நல்லி ராஜூவை உதயகுமாருடன் சேர்ந்து கொலை செய்ய மௌனிகா திட்டமிட்டார்.
அதன்படி, ஆகஸ்ட் 5-ஆம் தேதி மௌனிகா, வீட்டில் சமைத்த உணவில் 10 தூக்கமாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். அதை சாப்பிட்டவுடன் நல்லி ராஜூ அசந்து தூங்கியிருக்கிறார். பின்னர், மௌனிகா தனது காதலர் உதயகுமாருக்கு தகவல் தெரிவித்து, அவரை வீட்டிற்கு அழைத்துள்ளார். உதயகுமார், தனது நண்பர் மல்லிகார்ஜுனுடன் மௌனிகாவின் வீட்டிற்கு வந்து, அசந்து தூங்கிக்கொண்டிருந்த நல்லி ராஜூவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார். பின்னர், உதயகுமாரும் மல்லிகார்ஜுனும் நல்லி ராஜூவின் உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று, அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் வீசிவிட்டனர். இதனைத் தொடர்ந்து, கணவர் காணாமல் போனதாக மௌனிகா நாடகமாடியது கண்டறியப்பட்டது. அதன் பின்னர், மௌனிகா, உதயகுமார், மற்றும் மல்லிகார்ஜுன் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருமணத்தை மீறிய உறவில், மனைவி காதலனுன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.