கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா தேவி. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சந்தியா தேவி ஒரு விபத்தில் சிக்கியிருக்கிறார். அப்போது, அங்கு வந்த போத்தனூர் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ஆறுமுகம், சந்தியா தேவியை மீட்டு அனுப்பி வைத்திருக்கிறார். மேலும், வீட்டிற்கு பத்திரமாகச் சென்றுவிட்டு தனக்கு போன் செய்யுமாறு கூறியிருக்கிறார்.
அதன்பிறகு வீட்டிற்கு வந்த சந்தியா தேவி, தனக்கு உதவிய காவலர் ஆறுமுகத்திற்கு போன் செய்து தான் பத்திரமாக வீட்டிற்கு வந்து விட்டதையும் கூறியிருக்கிறார். அதனைப் பயன்படுத்திக்கொண்டு, சந்தியா தேவிக்குத் தொடர்ந்து போன் செய்த ஆறுமுகம், அவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார். ஆனால், சந்தியா தேவி, “என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றால் பெற்றோரிடம் வந்து பேசுங்கள்; அவர்கள் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, உறவினர் சிலருடன் காவலர் ஆறுமுகம் சந்தியா தேவியின் பெற்றோரைச் சந்தித்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார். அதன்பிறகு இருவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்துள்ளது. அதன்பிறகுதான் காவலர் ஆறுமுகத்தின் மன்மத லீலைகள் ஒவ்வொன்றாக வெளிவந்து மனைவி சந்தியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றன.
காவலர் ஆறுமுகத்திற்கு அடிக்கடி ஒரு திருமணமான பெண்ணிடமிருந்து செல்போன் அழைப்புகள், மெசேஜ்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்திருக்கின்றன. இதனால் சந்தேகமடைந்த சந்தியா தேவி, தனது கணவர் ஆறுமுகத்திடம் இதுகுறித்து கேட்டிருக்கிறார். பின்னர் அது பிரச்சனையாக மாறி, அந்த திருமணமான பெண்ணின் கணவர் வரை சென்று பேசி முடிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது ஒரு புறமிருக்க, சந்தியா தேவியைத் தொடர்பு கொண்ட மற்றொரு பெண், “நானும் உங்கள் கணவரும் 10 மாதங்களாகக் காதலித்து வருகிறோம்” என்று பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். மேலும், இருவரும் தனிமையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அனுப்பி வைத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி சந்தியா தேவி கணவரிடம் இதுகுறித்துக் கேட்டுள்ளார். ஆனால், “நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் தான்; எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை” என்று ஏதேதோ காரணங்களைக் கூறி ஆறுமுகம் சமாளித்திருக்கிறார்.
இதனிடையே, சந்தியா தேவிக்கு முன்பு காவலர் ஆறுமுகத்திற்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அவரது செல்போனை ஆராய்ந்து பார்த்தபோது, அதில் ஏகப்பட்ட பெண்களுடன் காவலர் ஆறுமுகத்திற்குத் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பல பெண்களுடன் அவர் தனிமையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இருந்திருக்கின்றன. இதனால் கோபமடைந்த சந்தியா தேவி, “போலீசில் புகார் அளிக்கப்போகிறேன்” என்று கூறியுள்ளார். அதற்கு, “நான் போலீஸ்காரன்; என்னை எல்லாம் ஒன்றும் பண்ண முடியாது. மிஞ்சிப்போனால் 15 நாள் ரிமாண்ட் பண்ணுவாங்க. சின்னதாக ஒரு பிளாக் மார்க் வரும். மத்தபடி 15 நாட்களில் நான் வெளியே வந்து திரும்ப வேலைக்குப் போய்விடுவேன். ஆனால், வெளியே வந்த நான் உங்கள் யாரையும் சும்மா விடமாட்டேன்” என்று காவலர் ஆறுமுகம் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த மனைவி சந்தியா தேவி, தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் ஆறுமுகத்தால் அச்சுறுத்தல் உள்ள நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை டிஐஜி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், தன்னைப் போல் இனி எந்தப் பெண்ணும் ஆறுமுகத்திடம் ஏமாறக்கூடாது என்றும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கைக்குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு வேதனையுடன் கோரிக்கை வைத்துள்ளார் சந்தியா தேவி.
ஏற்கெனவே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட காவலர் ஆறுமுகம், தொடர்ந்து பல பெண்களுடன் மன்மத லீலையை நிகழ்த்தி வந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/25/untitled-1-2025-10-25-18-03-14.jpg)