நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீதர் மற்றும் பரிமளா தம்பதியினர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமான நிலையில், இருவரும் ஈரோடு மாவட்டத்திற்கு குடிபெயர்ந்து பெருந்துறை காசிப்பிள்ளாம்பாளையத்தில் வசித்து வந்தனர். ஸ்ரீதர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் பரோட்டா மாஸ்டராக வேலைபார்த்து வந்துள்ளார். மனைவி பரிமளா சொந்தமாக இ-சேவை மையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
இந்தச் சூழலில்தான் ஸ்ரீதருக்கு பெருந்துறையில் ஓட்டுநராகப் பணியாற்றி வரும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பின்னர் இருவரும் நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். இதனிடையே நண்பர் ஸ்ரீதரின் வீட்டிற்கு கார்த்திகேயன் அடிக்கடி வந்து செல்வதால், பரிமளாவுடனும் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து கார்த்திகேயனுக்கும் ஸ்ரீதரின் மனைவி பரிமளாவுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டு, அடிக்கடி இருவரும் ஒன்றாகச் சந்தித்து தனிமையில் இருப்பது, வெளியே ஒன்றாகச் செல்வது என்று தங்களது உறவை வளர்த்து வந்துள்ளனர். மதுப் பழக்கத்துக்கு அடிமையான ஸ்ரீதர், கார்த்திகேயனுடன் சேர்ந்து அவ்வப்போது வீட்டிலேயே ஒன்றாக மது அருந்தியும் வந்திருக்கிறார். அந்த வகையில் சம்பவத்தன்று கார்த்திகேயன் மதுவை வாங்கிக்கொண்டு ஸ்ரீதரின் வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பிறகு ஸ்ரீதரும் கார்த்திகேயனும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது ஸ்ரீதருக்கு போதை தலைக்கேறி அங்கேயே மயங்கியுள்ளார்.
இதைப் பயன்படுத்திக்கொண்ட கார்த்திகேயன் பரிமளாவுடன் வீட்டின் படுக்கையறையில் தனிமையில் இருந்துள்ளார். அந்த நேரத்தில் போதை தெளிந்து படுக்கையறைக்கு வந்த ஸ்ரீதர், அங்கு தனது மனைவியுடன் நண்பன் கார்த்திகேயன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் கோபமடைந்த ஸ்ரீதரை சமாதானப்படுத்துவதாகக் கூறி, “மது அருந்தலாம் வா” என்று ஈங்கூர் பகுதிக்கு கார்த்திகேயன் அழைத்துச் சென்றுள்ளார். அதீத போதையில் இருந்த ஸ்ரீதர் தங்களுடைய திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருப்பதால், அவரைத் தீர்த்துக்கட்ட முடிவெடுத்த கார்த்திகேயன், தன்னுடைய டி-ஷர்ட் மூலம் ஸ்ரீதரின் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.
இந்தத் தகவலை மனைவி பரிமளாவிடம் கார்த்திகேயன் கூற, உடனடியாக அவரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். பின்னர் பரிமளா சாக்கு மூட்டையில் கணவரின் உடலை முடிந்து, வாய்க்கால் மேட்டில் உள்ள புதர் பகுதியில் வைத்துவிட்டு, இருவரும் ஈரோட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளனர். மறுநாள் சாக்கு மூட்டையிலிருந்து துர்நாற்றம் வீசியதால், அப்பகுதி மக்கள் பெருந்துறை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாக்கு மூட்டையைப் பிரித்து அதில் இருந்த ஸ்ரீதரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவியும் அவரது காதலனும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திகேயன் மற்றும் பரிமளா ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Follow Us