உத்திரபிரதேசம் மாநிலம், சம்பல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நதியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ராகுல் என்பரை திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில், அந்த பகுதியில் வசிக்கும் கௌரவ் என்பவருடன் நதியாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம், காலப்போக்கில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும், ராகுலுக்குத் தெரியாமல் அவ்வப்போது சந்தித்து வந்தனர்.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 17ஆம் தேதி இரவு ராகுல் வெளியில் சென்றிருந்த வேளையில், நதியா கௌரவை வீட்டிற்கு அழைத்தார். அன்றிரவு 2 மணியளவில் வீட்டிற்கு வந்த கணவன் இவர்களை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இந்த காட்சியைக் கண்ட கணவர் இருவரையும் திட்டியதால், ஆத்திரமடைந்த நதியா கனமான பொருள் ஒன்றால் ராகுலின் தலையில் தாக்கினார். இந்த தாக்குதலில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்த கணவனின் உடலை மறைக்க கௌரவுடன் சேர்ந்து திட்டம் தீட்டிய நதியா, அதற்கான வேலைகளையும் தொடங்கினார். மறுநாள் கௌரவ் கட்டர் மிஷின் ஒன்றை ஏற்பட்டு செய்தார். நதியா சந்தையிலிருந்து இரண்டு பெரிய கருப்பு பைகளை வாங்கி வந்தார். இருவரும் சேர்ந்து தலை, கை,கால்களை வெட்டி ஒரு பையிலும், உடலை மற்றோரு பையிலும் போட்டுவிட்டனர். பிறகு தலை உள்ள பையை சந்தௌசியில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜ்காட் அருகே கங்கை ஆற்றில் வீசியுள்ளனர். மற்றோரு பையை பட்ரோவா சாலைப் பகுதியில் உள்ள ஈத்காவிற்குப் பின்னால் வீசீனர்.
நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்த சம்பவம் பற்றி யாரிடமும் எதுவும் பேசாத நதியா, எதுவும் நடக்காததைப் போல தன் கணவரைக் காணவில்லை என்று புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, கடந்த டிசம்பர் 15ஆம் தேதியன்று சந்தௌசி கோட்வாலி காவல்துறையினர், பட்ரோவா சாலையில் இருந்த ஒரு கருப்புப் பையில் இருந்து சிதைந்த நிலையில் இருந்த ஒரு உடல் பகுதியை கண்டெடுத்தனர். அந்த உடலில் தலையும் கைகால்களும் இல்லாததால், இறந்தவரை அடையாளம் காண்பது போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. காவல்துறையின் தொடர் விசாரணையிலும், தடயவியல் பரிசோதனையிலும் அந்த உடலில் ராகுல் என பச்சை குத்தியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காணாமல் போனவர்களின் பட்டியலை காவல் துறையினர் ஆராய்ந்தனர். அதில் நதியா கொடுத்த புகாரில் காணாமல் போன தன் கணவர் பெயர் ராகுல் என குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே நதியாவை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து அந்த உடலைக் காட்டி இது உங்கள் கணவர் தானா என கேட்டதற்கு அவர் மறுத்துள்ளார். தொடர் விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவர் மீது சந்தேகம் எழுந்து காவலர்கள் அவரது போனை வாங்கி பார்த்துள்ளனர். அதில் உள்ள ஒரு புகைப்படத்தில், இந்த உடலில் இருந்த டீ-சர்ட் போன்ற உடை அணிந்த நபர் நதியாவின் உடன் இருக்கும் படத்தை பார்த்து, மேலும் விசாரணையை துரிதப்படுத்தினர். பின்பு உண்மையை ஒப்புகொண்ட நதியா நடந்தவற்றை காவல்துறையினரிடம் தெரியபடுத்தினார்.
இதையடுத்து காவல்துறையினர் நதியா மற்றும் கௌரவ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராகுல் என உடலில் பச்சை குத்தப்பட்ட பெயரும், அந்த டீ-சர்ட்டும் தான் இந்த வழக்கின் விசாரணைக்கு பெரும் உதவியாக இருந்தது என காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராகுலின் மீதமுள்ள உடல் பாகங்கள் கிடைக்கப்பெறாத நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மனைவி தன காதலனோடு சேர்ந்து கணவனைக் கொன்று, வெட்டி பையிலடைத்து வீசியெறிந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/23/chop-2025-12-23-15-53-28.jpg)