மதுரை மாவட்டம், புளியங்குளத்தைச் சேர்ந்தவர் 26 வயது குருதேவி. இவருக்கும், தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள கீழ பூலந்தபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியருக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, குருதேவி தனது கணவரைப் பிரிந்து, தனது தந்தையின் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

Advertisment

இதனிடையே, கணவர் பிரபு அடிக்கடி பணம் மற்றும் நகைகள் கேட்டு தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், குருதேவி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார். இந்நிலையில், ஜூலை 28 அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த குருதேவி, திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தனது உடலிலும், தனது ஆறு வயது மகளின் உடலிலும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

Advertisment

அப்போது, ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், தற்கொலை முயற்சியைத் தடுத்து, குருதேவி மற்றும் அவரது மகள் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினர். பின்னர், குருதேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் கூறியதாவது: "எனது மாமனார் பாலியல் தொந்தரவு செய்கிறார். எனது கணவர் பணம் மற்றும் நகைகள் கேட்டு என்னை அடித்து துன்புறுத்துகிறார். திருமணத்தின் போது வரதட்சணையாகக் கொடுத்த 15 பவுன் நகைகளை திரும்ப பெற்று தருமாறு சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், காவல்துறையினர் எனது கணவர் மற்றும் மாமனாரிடம் லஞ்சம் பெற்று எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், விரக்தியில் ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றேன்”  என்றிருக்கிறார்.

மேலும்,"எனது கணவர் மற்றும் மாமனார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சின்னமனூர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும், காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதே எனது தற்கொலை முயற்சிக்கு காரணம்" என்று கண்ணீர் மல்கக் தெரிவித்திருக்கிறார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து இருவரையும் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தேனி போலீசார், இந்த விவகாரம் குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.