திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த அத்தியவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். அவரது மகள் 20 வயதான கௌசல்யா. இவர் சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் முடித்த பின், பொன்னேரியில் தனியார் கல்லூரியில் பி.எட். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். ஆனால், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கௌசல்யாவிற்கு அவரது அத்தை மகன் 30 வயதான ராஜேஷ் என்பவருடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். ராஜேஷ் கொத்தனார் வேலை செய்து வரும் நிலையில், திருமணத்திற்குப் பிறகும் கௌசல்யா தனது படிப்பைத் தொடர்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், 7 ஆம் தேதி ராஜேஷ் வழக்கம்போல் வேலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது வீட்டில் தனியாக இருந்த மனைவி கௌசல்யா தவறி விழுந்து தலையில் காயமடைந்திருப்பதாகத் தகவல் கிடைத்ததாகவும், உடனடியாக ராஜேஷ் வீட்டிற்குச் சென்று அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கௌசல்யா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கௌசல்யாவின் உடலை மீண்டும் வீட்டிற்கே கொண்டு சென்றுள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கௌசல்யாவின் பெற்றோர், மகளின் தலையிலும் முகத்திலும் காயம் இருந்ததால் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரின் பேரில் பொன்னேரி போலீசார் கௌசல்யாவின் கணவர் ராஜேஷை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போதுதான் ராஜேஷ் தனது காதலியுடன் சேர்ந்து மனைவியை அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது.
ராஜேஷும் செங்குன்றத்தைச் சேர்ந்த உறவினர் மகளான 21 வயதான தீபிகாவும் காதலித்து வந்துள்ளனர். தீபிகா கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் திருமணத்திற்கு முன்பே ராஜேஷுக்கும் தீபிகாவிற்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. ஆனால், இருவரும் உறவு முறையில் அண்ணன்-தங்கை என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தச் சூழலில்தான் ராஜேஷுக்கும் கௌசல்யாவிற்கும் 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால், அதற்குப் பிறகும் ராஜேஷும் தீபிகாவும் காதலித்து வந்துள்ளனர். அவ்வப்போது இருவரும் சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
இதற்கிடையே தங்கள் காதலுக்கு மனைவி கௌசல்யா இடையூறாக இருப்பார் என்று கருதிய ராஜேஷ், காதலி தீபிகாவுடன் சேர்ந்து சதி திட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளார்.அதன்படி சம்பவ நாளன்று வீட்டில் இருந்த கௌசல்யாவின் முகத்தில் தலையணையால் அமுக்கியுள்ளார். ஆனால் அப்போது அவர் திமிறி எழுந்ததால் ராஜேஷ் கொடூரமாகக் கௌசல்யாவைத் தாக்கியுள்ளார். பின்னர் தலையணையால் அமுக்கியதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கௌசல்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து ராஜேஷ் மற்றும் அவரது காதலி தீபிகா ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். திருமணமான 5 மாதங்களில் காதலியுடன் சேர்ந்து மனைவியைக் கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/09/855-2026-02-09-16-57-38.jpg)