மதுரை வடக்கு தொகுதியில் சுற்றுப்பயணம் செய்த எடப்பாடி பழனிச்சாமி, மக்களிடம் பேசிய போது, "ஆளுங்கட்சி மேயர் 200 கோடி ரூபாய் முறைகேட்டில் சிக்கியிருக்கிறார். அதை, இந்த அரசே விசாரித்து மண்டல குழு தலைவர்கள் 5 பேர் ராஜினாமா செய்துள்ளனர். வரிக்குழு, நகரமைப்பு குழு தலைவர் ராஜினாமா செய்திருக்கிறார்கள். அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களின் வரியை ஏமாற்றுகிற அரசு திமுக அரசு. அதிமுக ஆட்சி அமைந்ததும் முழுமையாக விசாரித்து சொத்துவரி முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
காவல்துறை மேயரை கைது செய்யவில்லை, அவரது கணவரை கைது செய்திருக்கின்றனர். இந்த ஊழலுக்கு யார் பொறுப்பு மேயர் தானே..? அவரது கணவரையும் சாதாரண செக்ஷனில் கைதுசெய்து கண் துடைப்பு நாடகம் நடத்துகிறார்கள். இன்னும் மேயரை ஏன் பதவியில் தொடர வைக்கிறீர்கள், ஏதோ பிரச்னை இருக்கிறது.
திமுகவினர் தான் ஊழல் செய்தது என்று திமுக அரசே விசாரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. மக்கள் எதிர்ப்பை திசை திருப்ப திமுக நாடகம் ஆடியுள்ளது. அதிமுக ஆட்சியில் எல்லோரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். ஆடு மாடு கோழி பன்றி வரை வரி போட்டு வசூல் செய்து அடிப்படை வசதி செய்து தருவதற்குப் பதிலாக கொள்ளையடித்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் நிறைய பள்ளிகள் திறந்தோம். கற்போரின் எண்ணிக்கை அதிகரித்தது. திமுக ஆட்சியில் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டது. 10 ஆண்டுகளில் 17 அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தோம். திமுக அரசால் ஒரு மருத்துவக் கல்லூரியாவது கொண்டுவர முடிந்ததா? முடியாது. அதற்கு திறமையில்லை.
மதுரைக்கு 1300 கோடியில் முல்லை பெரியாறில் இருந்து குழாய் மூலம் தூய்மை நீரை கொடுக்க நடவடிக்கை எடுத்த அரசு அதிமுக அரசு. 40 ஆண்டு தண்ணீர் பிரச்னையே வராது, ஆனால் திமுக அரசு இதனை நிறைவேற்றவில்லை. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இத்திட்டம் நிறைவேற்றப்படும் " என்றார் எடப்பாடி பழனிச்சாமி.