தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், தனிப்பிரிவு உதவியாளர், வனவர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான குருப் 2 மற்றும் 2 ஏ அறிவிப்பைக் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அதில் குரூப் - 2 பதவிகளுக்கு 1,126 பேரும், குரூப் 2ஏ பதவிகளுக்கு 9 ஆயிரத்து 457 பேரும் தகுதி பெற்றனர். அதனைத் தொடர்ந்து முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்ற தேர்வர்களுக்கு முதன்மைத் தேர்வு இன்று (08.02.2025) காலை நடைபெற இருந்தது. அதன்படி இன்று காலையில் குரூப் 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வும், பிற்பகலில் குரூப் 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான தமிழ்த் தகுதித் தேர்வும் நடைபெற இருந்தது.
இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கல்லூரி அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கான பதிவு எண்கள் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டது. மேலும் நந்தனம் அரசு கலைக் கல்லூரி தேர்வு மையத்தில் காலை 9 மணியைக் கடந்தும் வினாத்தாள் வரவில்லை எனப் புகார் எழுந்தது. இதனையடுத்து தேர்வெழுத அனுமதிக்கப்படாததால் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு முழுவதும் குருப் 2ஏ முதன்மை தேர்வு மற்றும் பிற்பகலில் நடைபெற இருந்த தமிழ்த் தகுதித் தேர்வையும் ரத்து செய்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டது. இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ. சண்முகசுந்தரம் பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் அ. சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்க்குறிப்பில், “சென்னையில் இன்று (08.02.2006) நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான (தொகுதி II மற்றும் IIA பணிகள்) பிரதான தேர்வுகளுக்கான முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவிருந்த எழுத்துதேர்வுகள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் 3 மையங்களில் நடத்த இயலவில்லை எனவே தேர்வர்கள் நலனை முன்னிட்டு இன்று நடைபெறவிருந்த இரண்டு தேர்வுகளும் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டு பின்னர் வேறு தேதியில் நடத்தப்படும்.
இது குறித்து தேர்வர்கள் அனைவருக்கும் மறுதேர்வு நடைபெறும் நாளுக்கு 15 தினங்களுக்கு முன்பாக தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-Mail) மூலம் தகவல் அளிக்கப்படும்.எதிர்வரும் 22.02.2026 முற்பகல் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு (தொகுதி 2) பணிகள் பொது அறிவு தேர்வு (தாள் - 2 (Descriptive Type) அன்றைய தினமே நடத்தப்படும். இது தொடர்பாக தேர்வர்களுக்கு தேர்வு மையங்கள் மீண்டும் சரிபார்த்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (Hall Ticket) மீண்டும் 13.02.2026 அன்று வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us