கடந்த 27ஆம் தேதி நடந்த கரூர் சம்பவத்திற்கு பிறகு வீட்டுக்குள் சென்ற விஜய் 34 மணி நேரத்திற்கு பிறகு இன்று வெளியே வந்துள்ளார். தன்னுடைய நீலாங்கரை வீட்டிலிருந்து பட்டினப்பாக்கம் வீட்டிற்கு அவர் செல்வதாக கூறப்படுகிறது. அங்கிருந்து அவர் கரூர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேநேரம் பாதிக்கப்பட்ட மக்களை காண செல்லும் விஜய்க்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அக்கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாகவே மருத்துவமனைகள் தயாராக இருந்ததாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ள ஆதவ் அர்ஜுனா, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க மருத்துவமனையில் என்னை அனுமதிக்கவில்லை. கூட்ட நெரிசலில் உள்ளூர் அரசியல்வாதிக்கு தொடர்பு உள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். செந்தில்பாலாஜி குறித்துப் பேசிய பொழுது மின்தடை ஏற்பட்டதோடு கற்கள், செருப்புகள் வீசப்பட்டது என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இந்நிலையில் மதுரையில் தவெக வழக்கறிஞர் அறிவழகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நேற்று நீதியரசர் அணுகி இன்று உடனடியாக எங்களுடைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு சிபிஐ விசாரணை கேட்டிருந்தோம். அதன்படி இன்று மனுவை தாக்கல் செய்யுங்கள் என்று சொல்லி இருக்கிறார். அதனால் உள்ளே சென்று இருக்கிறார்கள். இதற்குப் பிறகு என்ன நடந்தது எனக் கேட்டுக்கொண்டு பின்னர் உங்களுக்கு அப்டேட் கொடுக்கிறேன்'' என்றார்.
மேலும் பேசிய அவர், ''வாகனங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது, போக்குவரத்துக்கு எந்த பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்று கூறிதான் மெதுவாக விஜய் வந்தார். அதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்ளக்கூடாது. வாகனம் வேகமாக வந்திருந்தால் பின்னால் வந்திருக்கக்கூடிய இளைஞர்கள், மாணவர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படும். இவற்றையெல்லாம் தடுப்பதற்காக தான் மெதுவாக வந்தது. உடல்கூறாய்வு என்பது மாலை சூரிய அஸ்தமனத்திற்கும் சூரிய உதயத்திற்கும் முன்பாக செய்ய மாட்டார்கள். ஆனால் இந்த வழக்கைப் பொறுத்தவரை இரவில் 39 பேருக்கு உடற்கூறாய்வு செய்திருக்கிறார்கள். இதற்கான சாத்தியம் எப்படி இருந்தது? இதற்கான மருத்துவர்கள் எப்படி வந்தார்கள்? அந்த மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்வதற்கு தகுதி படைத்தவர்களா? என்று கேள்வி எல்லாம் இந்த வழக்கில் தொடுத்திருக்கிறோம்'' என்றார்.