கிராமப்புற மக்கள், ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை செய்யும் விதமாக கடந்த 2005ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை கொண்டு வந்தது. வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும் வறுமையை ஒழிக்கவும் இந்த சட்டத்தை அப்போதைய மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின் மூலம், ஒரு நபர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை செய்வதற்கான உத்தரவாதத்தை அளித்தது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் தொழிலாளர்களாக உள்ளனர்.
இதனிடையே, மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு ‘விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி’ என்ற பெயரில் புதிய திட்டத்தை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தில் 90% நிதியை மத்திய அரசு இதுவரை வழங்கி வந்த நிலையில் இனி 60% மட்டுமே வழங்கும் எனவும் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. அதோடு 40% நிதியை மாநிலங்கள் ஏற்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி பெயரில் உள்ள இந்த திட்டத்தை மாற்றியமைத்து இந்தியில் பெயர் வைத்துள்ளதாகதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில், நாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று (16-12-25) கூடியது. மக்களவை கூடியதும் விக்ஸித் பாரத் ஜி ராம் ஜி என்ற புதிய திட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த மசோதா மீதான விவாதத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், வயநாடு தொகுதி எம்.பியுமான பிரியங்கா காந்தி பேசியதாவது, “பல வருடங்களாக வருடங்களாக, நீங்கள் ஊரக வேலை திட்டத்திற்கான நிதியைக் குறைத்து வருகிறீர்கள். எங்கு சென்றாலும், தொழிலாளர்கள் பணம் வரவில்லை என்று கூறுவார்கள். எனவே, எங்கு நிதி ஒதுக்க வேண்டும், எங்கு வேலை செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யும் கிராம பஞ்சாயத்தின் உரிமை பறிக்கப்படுகிறது. எனவே, அனைத்துக் கண்ணோட்டங்களிலிருந்தும் இந்த மசோதா தவறானது என்று நாங்கள் உணர்கிறோம்.
பெயர் மாற்றுவதில் உள்ள இந்த வெறி எனக்குப் புரியவில்லை. இதற்கு நிறைய செலவுகள் தேவைப்படுகின்றன. அவர்கள் ஏன் இதை தேவையில்லாமல் செய்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. இரண்டாவதாக, ஊரக வேலை திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பு என்ற உரிமை வழங்கப்பட்டது. இந்த மசோதா அந்த உரிமையை பலவீனப்படுத்தும். இந்த மசோதாவில் அவர்கள் இரண்டு அல்லது மூன்று விஷயங்களைச் சேர்த்த விதம், வெளியில் இருந்து பார்க்கும்போது நாட்களின் எண்ணிக்கையை அதிகரித்திருப்பது போல் தெரிகிறது. நீங்கள் ஊதியத்தை அதிகரித்தீர்களா?
மகாத்மா காந்தி என் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல, ஆனால் அவர் இன்னும் என் குடும்ப உறுப்பினரைப் போலவே இருக்கிறார். இது முழு தேசத்தின் உணர்வு. இந்த மசோதாவை மேலும் விவாதிப்பதற்காக நிலைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும். யாரோ ஒருவரின் ஆவேசம் மற்றும் பாரபட்சம் காரணமாக எந்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படக்கூடாது. சபையின் ஆலோசனையைப் பெறாமல், எந்த விவாதமும் இல்லாமல், இந்த மசோதாவை அவசரமாக நிறைவேற்றக்கூடாது. இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். மேலும் அரசாங்கம் ஒரு புதிய மசோதாவை அறிமுகப்படுத்த வேண்டும்” என்று ஆவேசமாகப் பேசினார்.
முன்னதாக மகாத்மா காந்தி பெயரை நீக்குவதற்கு எதிராக மக்களவையில் இன்று திமுக நோட்டீஸ் வழங்கியது. இது தொடர்பான நோட்டீஸை திமுக எம்.பி டி.ஆர்.பாலு வழங்கி, பெயர் சர்ச்சை பற்றி விவாதிக்க வேண்டும், புதிய மசோதா தொடர்பான எதிர்ப்பை தெரிவிக்க அனுமதி தேவை என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அந்த மசோதாவ சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்க மறுத்து நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/16/priya-2025-12-16-14-38-19.jpg)