அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "ஒரு வாரத்துக்கு முன்பு கோவை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் ஒரு கல்லூரி மாணவியும் அவரது ஆண் நண்பரும் காரில் பேசிக்கொண்டு இருந்தபோது போதை ஆசாமிகள் 3 பேர் அந்த காரில் இருந்த ஆணை தாக்கிவிட்டு, மாணவியை புதருக்குள் தூக்கிச் சென்று பாலியல் கொடுமை செய்திருக்கிறார்கள்.
இது ஒரு கொடுமையான செயல். மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிக்கு அருகிலேயே இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பாலியல் கொடுமை சர்வ சாதாரணமாக நடக்கிறது. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் காவல்துறையிடம் கொஞ்சம்கூட பயமில்லாமல் இருப்பது இதன் மூலம் தெரியவருகிறது.இப்படிப்பட்ட நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது.
இந்த அரசு தங்களுக்கு வேண்டப்பட்டவர் ஒருவர் டிஜிபியாக வரவேண்டும் என்று நினைப்பதால் இதுவரை டிஜிபி நியமிக்கப்படவில்லை. ஒரு டிஜிபி ஓய்வுபெறுவதற்கு 3 மாதங்கள் முன்பே அவர்கள் தகுதியான டிஜிபி பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி, 3 பேர் மாநில அரசுக்கு அனுப்பி அதிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் இந்த முறையை தமிழக அரசு கடைபிடிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் வரை போய், உச்ச நீதிமன்றம் விரைவாக டிஜிபியை நியமிக்க வேண்டும் என்று சொன்ன பிறகும் அது நடக்கவில்லை. இப்போது மத்திய யுபிஎஸ்சி 3 பேரை தேர்ந்தெடுத்து அனுப்பியும் டிஜிபி நியமிக்கப்படவில்லை.
இப்போது தனிநபர் உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்திருக்கிறார். அதன் அடிப்படையில் தமிழக அரசு 3 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. ஏன் இந்த குளறுபடி? நிரந்தர டிஜிபி நியமிக்கப்படாத்தால்தான் முறையாக சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாத சூழல் நிலவுகிறது. இன்றைக்கு ஒவ்வொரு தொகுதியிலும் பல்லாயிரக்கணக்கான இறந்து போன வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து வருகிறது. நகரத்தில் குடியிருப்பவர்கள் வீடு மாறி போன பின்பும் அவர்கள் பெயர் இடம்பெற்று வருகிறது. இப்படி முறைகேடாக இருக்கும் வாக்காளர்களை விடுவித்து தகுதியான வாக்காளர்களை பட்டியலில் இடம்பெறச் செய்வதற்காகவே SIR பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது முக்கியம் அதற்கான பணிகளை திமுக எதிர்க்கிறது.
SIR என்றாலே அவர்கள் ஏன் அலறுகிறார்கள் என்று தெரியவில்லை. கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களும் பதறுகிறார்கள். ஒரு மாத காலம் கொடுத்தும் உரிய நேரம் கொடுக்கவில்லை என்கிறார்கள். ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு பிஎல்ஓ, அரசு அலுவலரை நியமித்து அவர் ஒவ்வொரு வீடாகப் போய் படிவங்களைக்கொடுத்து, அவற்றை பூர்த்தி செய்து வாங்குகிறார்கள். இதில் எந்தவித தாமதமும் ஏற்பட வாய்ப்பே இல்லை.
தேர்தல்களின்போது வாக்காளர்களுக்கான பூத் ஸ்லிப்பை 5 நாட்களில் கொடுக்கிறார்கள். அப்படி இருக்கும்போது இந்த பணிக்காக ஒரு மாதம் கொடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பாகத்திலும் 300 வீடுகள்தான் இருக்கும். ஒரு நாளைக்கு 50 வீடுகள் என்று எடுத்துக்கொண்டாலும் அதிகபட்சம் 8 நாட்களில் கொடுத்துவிடலாம். அதை வாங்கவும் அவகாசம் இருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை தகுதியான வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அதனால்தான் நாங்கள் SIR-ஐ ஆதரிக்கிறோம்." என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/10/eps2-4-2025-11-10-18-15-54.jpg)