தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வார இறுதியில் சனிக்கிழமைகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில் விஜய்யின் பிரச்சாரத்திற்கு பாரபட்சமின்றி அனுமதி வழங்க காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதோடு விஜய் தரப்பிற்கும் பல்வேறு கேள்விகளை வைத்துள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. மற்ற அரசியல் கட்சிகளுக்கு இதுபோன்ற எந்த விதமான நிபந்தனைகளும் விதிக்கப்படுவதில்லை. சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு எந்த வழியில் சென்னை திரும்ப வேண்டும் என்றெல்லாம் நிபந்தனை விதிக்கிறார்கள். எத்தனை வாகனங்கள் வர வேண்டும், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் வரக்கூடாது என நிபந்தனை விதிக்கிறார்கள். அவர்களை வரம் வேண்டாம் என எப்படி சொல்ல முடியும். இதுபோன்ற நிபந்தனைகள் அனைத்து கட்சிகளுக்கும் தரப்படுவதில்லை தங்களுக்கு மட்டுமே விதிக்கப்படுகிறது' என தெரிவித்தார்.''
அப்பொழுது குறுக்கிட்ட நிதிபதி 'இதுபோன்ற கட்டுப்பாடுகள் அனைத்து கட்சிகளுக்கும் விதிக்கப்படுவது தானே?' என தெரிவித்து, பொதுமக்கள் பாதிக்கப்படுவதாலும், சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் நிலை உருவாவதால் இதுபோன்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. அக்கட்சியின் தலைவராக இருப்பவர் ஏன் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடாது என கேள்வி எழுப்பினார்.
யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல. சேதப்படுத்தப்பட்ட பொதுச்சொத்துகளுக்கு இழப்பீடு வசூலிக்கப்பட்டதா? இல்லையென்றால் அந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட நேரிடும். மற்றவர்களுக்கு நீங்கள் முன் மாதிரியாக இருந்து காட்ட வேண்டும். இதேபோன்று மற்ற அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக் கூடிய வகையில் ஒரு பொதுவான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். விதிமுறைகளின் படி பொதுச் சொத்துக்கள் சேதம் அடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் வகையில் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்யும் வகையில் வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த மனுவில் காவல்துறை பதிலளிக்க அவகாசம் அளித்து வழக்கின் விசாரணையை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.