Why is AIADMK shedding tears after destroying the future of government employees? - Minister Anbil Mahesh's anger Photograph: (dmk)
'அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே நிர்மூலமாக்கி அதிமுக, இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது?' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை பார்த்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பதற்றப்படுவதை அவரது பேட்டிகளும் அறிக்கைகளும் வெளிப்படுத்துகின்றன. சேலத்தில் செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த போது ’’மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத் திரும்புவது பற்றி சூழ்நிலையைப் பொறுத்து முடிவு எடுக்கப்படும்’’ என்று சொல்லியிருக்கிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரசு ஊழியர்களுக்கு 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி அரசு ஊழியர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார். ஆட்சியில் இருந்தபோது பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாகச் சொல்வது “அறுக்கமாட்டாதவன் இடுப்பில் 58 அருவாளாம்” என்ற பழமொழியைத்தான் நினைவுக்கு கொண்டு வருகிறது.
ஓய்வூதிய திட்டத்தை முழுமையாகப் பறித்து அரசு ஊழியர் எதிர்காலத்தையே 2003-ஆம் ஆண்டில் சிதைத்த அதிமுக, தற்பொழுது அரசு ஊழியர்கள் மீது திடீர் கரிசனம் காட்டுவதே வெறும் தேர்தல் நாடகம்தான் என்பதைக் கூட அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ளமாட்டார்களா என்ன?
2016 சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி எண் 46-ல் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை 5 ஆண்டுகாலமாக ஏன் நிறைவேற்றவில்லை?
அரசு ஊழியர்களின் 23 ஆண்டுக் காலக் கோரிக்கையான ஓய்வூதியத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்து அவர்களின் வாழ்வில் வசந்தத்தை தந்திருக்கிறார். இப்போது திமுக அந்த வாக்குறுதியை நிறைவேற்றியதும் பொறுக்க முடியாமல் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறுவது பற்றி முடிவு எடுப்போம் என்றெல்லாம் தேன் தடவி பேசுகிறார் பழனிசாமி. 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது பழனிசாமி அந்தப் பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கலாமே! ஏன் செய்யவில்லை? இப்போது திமுக அரசு அறிவித்ததும் பொங்கி எழுவது ஏன்?
பழனிசாமி ஆட்சியில் 2019-ல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய நேரத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை எல்லாம் பட்டியல் போட்டு தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளத்தைவிட அதிகமாக அரசு ஊழியர்கள் வாங்குகிறார்கள் என விளம்பரம் வெளியிட்டு அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்திய பழனிசாமிதான் இப்போது அரசு ஊழியர்கள் மீது போலிப் பாசத்தை கொட்டுகிறார்.
ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியக் கணக்கீடு என்பது கடைசியாகப் பெற்ற 12 மாத ஊதியத்தின் சராசரி அடிப்படை ஊதியத்தில் 50 சதவிகிதம். ஆனால் தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் ஓய்வூதியக் கணக்கீடு என்பது அரசு ஊழியர் கடைசியாகப் பெற்ற மாதத்தின் அடிப்படை ஊதியத்தில் 50 சதவிகிதம். இந்தக் கணக்கீடுதான் பழைய ஓய்வூதியத் திட்டத்திலும் இருந்தது. அதையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கேட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறார்.
ஒன்றிய அரசின் திட்டத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே ஓய்வூதியமும், அதன் தொடர்ச்சியாகக் குடும்ப ஓய்வூதியமும் கிடைக்கும். ஆனால், தமிழ்நாடு அரசின் திட்டத்தில் பணிக்காலம் குறை வாக இருந்தாலும் குறைந்தபட்ச ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
13,000 கோடி ரூபாயை அரசு இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளதுடன், ஆண்டு தோறும் சுமார் 11,000 கோடி ரூபாயை கூடுதலாக ஒதுக்கும் என அறிவித்துள்ளது. ஆட்சியில் இருந்த போது 2003-ஆம் ஆண்டில் ஓய்வூதியத் திட்டத்தையே ரத்து செய்து அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையே நிர்முலமாக்கிய அதிமுக இப்போது ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறது? அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்துவதையே வாடிக்கையாக வைத்திருக்கும் பழனிசாமி ஏன் பதறுகிறார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Follow Us