'Why I joined DMK..' - Vaithilingam lists the reasons Photograph: (dmk)
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்தி வந்த அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த வைத்திலிங்கம் அடுத்த கட்ட தனது அரசியல் நகர்வாக இன்று (21.01.2026) காலை திமுகவில் இணைந்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக பதவி வகித்து வரும் வைத்திலிங்கம் அதிமுகவின் முக்கிய பிரபல பிரமுகராகவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக வலம் வந்தவர். கடந்த 2022 இல் அதிமுக ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை எழுந்த போது ஓ.பி.எஸ். ஆதரவாளராக இருந்தார். அதன்பின்னர் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இணை ஓருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவிடம் வைத்திலிங்கம் கொடுத்த நிலையில் திமுகவில் இணைய திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை செந்தில் பாலாஜி உள்ளே அழைத்துச் சென்ற நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வைத்தியலிங்கம் திமுகவில் இணைந்தார். வைத்திலிங்கத்தின் மகன் பிரபுவும் திமுகவில் இணைந்தார்.அதேபோல் ஓபிஎஸ் ஆதரவாளரும், குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான ராமச்சந்திரன் திமுகவில் இணைய உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.
இணைவுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம் பேசுகையில், ''மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிக்கப்பட்டது திராவிட முன்னேற்றக் கழகம். அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் நான் இணைந்து இருக்கிறேன். அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் நான் இணைந்துள்ளேன். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயல்படுவது உகந்ததாக இல்லை. அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை சர்வாதிகாரமாக செயல்படுகிறது. என்னை தனிப்பட்ட முறையில் வருவதற்கு அதிமுக அழைத்தார்கள். நான் செல்வதற்கு தயாராக இல்லை. ஒன்றாக இணைந்தால் தான் வருவேன் என்ற நிலையில் இருந்தேன். அவருடைய நடவடிக்கை எனக்கு பிடிக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு இப்பொழுது திமுக தான் தமிழ்நாட்டு மக்களை தமிழ்நாட்டு முன்னேற்றத்திற்கு பாடுபடுகிறது அதனால் திமுகவில் இணைந்துள்ளேன்'' என்றார்.
Follow Us