எதிர்வரும் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் தற்போதே பரப்புரைகளை தொடங்கியுள்ளன. அதன்படி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் தமிழகத்தின் பெரும்பாலான சட்டமன்ற தொகுதிகளில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சென்னை, சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடைபெற்றதாக தமிழக அரசின் மருத்துவத் துறை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள், நாமக்கல் மாவட்டம், குமாரப்பாளையத்தில் ஏழை விசைத்தறி தொழிலாளர்கள். சிறுநீரக மாற்று மோசடி வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, புரோக்கர்கள் மூலம் நடைபெற்ற கிட்னி முறைகேடு கொடூரமான செயல் என கண்டித்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மற்றும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டு ஒரு மாதம் கடந்தும், தமிழக அரசு இன்னும் விசாரணையை தொடங்கவில்லை.
மாறாக, கரூர் நெரிசல் தொடர்பான நீதிமன்ற உத்தரவு அரசுக்கு கிடைக்கப்பெறும் முன்பே, சில மணி நேரங்களிலேயே, மண்டல காவல் துறை ஐ.ஜி. தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை துவங்கப்பட்டுவிட்டது. ஆனால் கிட்னி முறைகேடு வழக்கில் இதுவரை விசாரணை தொடங்காதது ஏன்?
இரண்டு வழக்குகளிலும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுகள் ஒன்றுபோல் இருந்த போதிலும், தங்களுக்கு தொடர்புடையவர்கள் வழக்கு என்றால், விசாரணையை தாமதப்படுத்துவதும், கிடப்பில் போடுவதும், வேண்டாதவர்கள் மீதான விசாரணை என்றால் துரித வேகத்தில் செயல்படும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் Failure அரசின் இரட்டை வேடம் தமிழக மக்களிடத்தில் அம்பலமாகிவிட்டது' என தெரிவித்துள்ளார்.