Why do we need a 'drama stage'? - The villagers who smashed it Photograph: (chengalpattu)
அரசின் சார்பில் கட்டப்பட்டு வந்த நாடக மேடையை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து உடைத்து சேதப்படுத்தியதோடு தங்களுக்கு பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்ற அடிப்படை கட்டமைப்புகள் வேண்டும் என கோரிக்கை வைத்த சம்பவம் செங்கல்பட்டில் நிகழ்ந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்துள்ளது போந்தூர் கிராமம். இந்த கிராமத்தில் ஊரின் ஒதுக்குப்புறமாக எம்ஏ.எல்.ஏ நிதியில் இருந்து 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாடக மேடை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதி கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களுக்கு நாடக மேடை வேண்டாம் கோவிலுக்கு அருகிலேயே ஏதோ ஒரு பகுதியில் நாடகம் மேடை அமைத்துக் கொடுங்கள்.
இதைவிட எங்களுக்கு முக்கியமாக பள்ளி மற்றும் மருத்துவக் கட்டமைப்புகள் தேவைப்படுகிறது. எங்கள் ஊருக்கு வந்த பள்ளி மற்றும் மருத்துவமனை வசதிகளை கட்ட இடமில்லை என சொல்லி ரிட்டன் செய்து விட்டார்கள். ஆனால் இதற்கு மட்டும் எப்படி இடம் கிடைத்தது. இங்கு அதிகமான இளைஞர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். வெளியூரில் இருந்து வருபவர்கள், உள்ளூர் இளைஞர்கள் என பலரும் இங்கே அமர்ந்து மது அருந்துகின்றனர். நாடக மேடை கட்டி வைத்தால் இந்த பகுதியிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற வாய்ப்புள்ளது. அதேபோல் இந்த பகுதியில் பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கு சுதந்திரமாக சென்று விட்டு வர முடியவில்லை. இப்படி பல்வேறு பாதுகாப்பு சூழ்நிலைகள் இல்லாத நேரத்தில் இந்த தனிப்புறமான பகுதியில் எதற்கு எங்களுக்கு நாடக மேடை என கூறி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி நாடக மேடைக்காக போடப்பட்டிருந்த கட்டமைப்புகளை சேதப்படுத்தினர்.