தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோவை குனியமுத்தூர் தொகுதி மக்களிடம் உரையாற்றும்போது, "மக்களின் செல்வாக்கை திமுக இழந்துவிட்டது அதனால் வீடுவீடாகச் சென்று கெஞ்சிக் கூத்தாடி கையெழுத்து வாங்குகிறார்கள். இந்த அவல நிலையில் திமுக இருப்பதை மறந்து விட்டு, அதிமுகவைப் பற்றி பேசுறார் உதயநிதி.
அதிமுக ஐசியுவில் இருக்கிறதாம், திமுக தான் ஐசியுவில் இருக்கிறது. அதனால் தான் கதவை தட்டி உறுப்பினர் சேர்க்கிறீர்கள். அதிமுக அப்படியில்லை. இரண்டு கோடி தொண்டர்கள் உள்ள வலிமையான இயக்கம். மக்களின் நன்மதிப்பை பெற்ற கட்சி அதிமுக.
மகளிர் உரிமைத் தொகை பற்றியே ஸ்டாலின் பேசுகிறார், நீங்கள் கொடுக்கவில்லை, நாங்கள் கொடுக்க வைத்தோம்.28 மாதங்களாக அதிமுக சார்பில் தொடர்ந்து சட்டமன்றத்தில் பேசி அழுத்தம் கொடுத்தோம், பொதுக்கூட்டங்களில் பேசினோம், வேறு வழியில்லாமல் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள்.
மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும் என்பது அதிமுக நிலை, ஊழல் அரசான திமுகவை வீழ்த்த வேண்டும் என்பது பாஜகவின் எண்ணம். இரண்டு கட்சிக்கும் ஒரே கருத்து என்பதால் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறோம். அதிமுக பாஜக கூட்டணி வைத்ததுமே திமுக பயந்து விட்டது. நீங்களும் மக்களை சந்தியுங்கள் ; பேசுங்கள்.
நீங்கள் செய்த திட்டங்கள் பற்றி பேசுங்கள், எதாவது செய்திருந்தால் தானே பேச முடியும்? அதிமுக ஆட்சியில் கோவையில் எவ்வளவு பாலங்கள், அவ்வளவு பாலமும் நாங்க கட்டியது. அதிமுக பெற்ற குழந்தைக்கு திமுக பெயர் வைக்கிறது. அதிமுக திட்டத்துக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறக்கிறார் ஸ்டாலின்.
கடந்த ஆகஸ்ட் இறுதியில் கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட நரசீபுரம், வால்கரடு பிரிவு வனப்பகுதியில், சிறுத்தை இறந்து கிடந்தது. அதனை எரித்து விட்டனர். பொதுவாக வன விலங்குகள் இறந்தால் குழிதோண்டி புதைக்கப்பட வேண்டும். அதற்கு மாறாக எரித்தது பொதுமக்களிடத்தில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கோவை மலையடிவாரத்தில் சுமார் 700 ஏக்கருக்கு மேல் திமுக குடும்பத்திற்கு பினாமியாக, நெருக்கமாக இருக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு வீட்டு மனையாகப் பிரித்து நகரமயமாக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அவர்கள் வனத்தில் மரத்தை வெட்டி வீழ்த்தியதில் மான்கள் போன்ற வனவிலங்குகள் இறந்துள்ளன. அது மட்டுமல்லாமல், வனத்தை அழிக்கும் போது காட்டு விலங்குகளால் பணியாளர்கள் தாக்கப்பட்டு இறந்துள்ளனர். இந்த செய்தி வெளியே வராமல் மூடி மறைக்கப்பட்டதாக செய்தி வந்துள்ளது. சிறுத்தை இறந்ததற்கு ஜி ஸ்கொயர் காரணமாக இருக்கலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. வனத்துறையும், மாவட்ட நிர்வாகம் உண்மை நிலையை வெளியிட வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதெல்லாம் விசாரிக்கப்பட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.